Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ யோகா விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்

யோகா விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்

யோகா விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்

யோகா விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்

ADDED : ஜூன் 22, 2025 06:50 AM


Google News
ஸ்ரீ ஸ்ரீ குருகுலம், வேத விஞ்ஞான மஹா வித்யா பீடம், வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை சார்பில், 11வது சர்வதேச யோகா தினம், அவிநாசி, ஸ்ரீசெந்துார் மஹாலில் கொண்டாடப்பட்டது.

இதில், பங்கேற்ற கனடா, சிவசத்ய நாராயணா தேவஸ்தானம் சந்திர சேகர சிவாச்சார்யார், 'யோகாவின் மாண்பு' என்ற தலைப்பில் பேசியதாவது:

உடல் நன்றாக இருந்தால் தான், மனம் எந்த விஷயத்திலும் ஒருமைப்படும். உடல் - மனம் ஒருமைப்பாடுதான் யோகா. ஒவ்வொரு நாளும், செய்யக்கூடிய வேலைகள் சிறப்பாக இருக்க, யோகா அவசியம். இலக்கையும் அடைய முடியும். முதுமையில் தேடி ஓடாமல், இளமை பருவத்தில் நமக்கு நேரம் இருக்கும் போது யோகா கலையை கற்றுக் கொண்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

ஜெர்மனி, வட அமெரிக்கா, பிரிட்டன் என, பல வெளிநாடுகளில் உணவு கட்டுப்பாட்டுடன் சேர்ந்து, யோகா செய்கின்றனர். இக்கலை உலகம் முழுவதும் தற்போது பரவி வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில், அதிகளவில் யோகா பயிற்சி மையங்கள் முளைத்து வருகின்றன

யோகாசன கலையை பிரதமர் மோடி சரியான நேரத்தில், சர்வதேச அளவில் கொண்டு சென்று விட்டார். யோகா பயிற்சியின் அவசியத்தை வெளிநாட்டவர் புரிந்து கொண்டு பயிற்சி செய்கின்றனர். இந்தியர்கள் மத்தியில் இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தேவையில்லாத நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டாம். அளவாக சாப்பிடுவது, நிதானமாக யாரிடத்திலும் கோபம் கொள்ளாமல் இருப்பது சிறப்பு. நம் எண்ணங்கள் அனைத்தும், மொபைல் போன் உள்ளிட்ட புதிய பொருளை தேடி அலைகிறது. அவற்றையெல்லாம் தேடாமல், நமக்குள் இருக்கும் பொக்கிஷமான கண், உடல் உறுப்புகளை பேணி காப்பது அவசியம். நாம் சரியாக இருந்தால், அனைத்தும் தேவையான நேரத்தில் நம்மை வந்து சேரும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

வேத ஆகம பாடசாலை மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து பார்வையாளர்களிடம் பாராட்டு பெற்றனர். ஆடிட்டர் முரளிதரன் தலைமை வகித்தார். யோகா ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீஸ்ரீகுருகுல வேத ஆகம ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் அபிராம சுந்தர சிவாச்சார்யார், கோவை - பீளமேடு வேல்முருகன் கோவில் தலைமை குருக்கள் சீனிவாச சிவம், செந்துார் மஹால் நிர்வாகி ஓதியப்பன், பா.ஜ., தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us