ADDED : பிப் 12, 2024 02:53 AM
பல்லடம்:பல்லடத்தில், மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரத்தை சேர்ந்தவர் பாரதிதாசன், 32. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் நிஷா, 24. பாரதிதாசனும், நிஷாவும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர்; இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
குடும்பத்தினருடன் கரூரில் வசித்து வரும் நிலையில், நிஷா, அவ்வப்போது பல்லடத்தில் உள்ள தன் தாய் வீட்டுக்கு வந்து செல்வார்; 'பல்லடத்திலேயே வேலை பார்த்துக் கொண்டு தங்கிவிடலாம்' என நிஷா அடிக்கடி கூறி வர, பாரதிதாசன் இதை நிராகரித்தார்.
சில தினங்கள் முன் பல்லடம் வந்த நிஷா, கரூர் திரும்பவில்லை. கரூருக்கு உடனடியாக வருமாறு, பாரதிதாசன் நிஷாவிடம் போனில் தெரிவித்துள்ளார். நிஷா சம்மதிக்கவில்லை.நேற்று பல்லடம் வந்த பாரதிதாசன் நிஷாவை தன்னுடன் வருமாறு அழைக்க, நிஷா வர மறுத்தார்; மேலும் தான் அணிந்திருந்த தாலியை கழற்றிவைத்தார்.
ஆத்திரம் அடைந்த பாரதிதாசன், அரிவாளால், நிஷாவின் கை மற்றும் தலையில் வெட்டினார். படுகாயம் அடைந்த நிஷா, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்லடம் போலீசார், பாரதிதாசனை கைது செய்தனர்.