ADDED : ஜூன் 06, 2025 06:18 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், அவிநாசி; கோவை மாவட்டம், அன்னுார் பகுதிகளில் பெய்யும் மழைநீர், சிறு சிறு ஓடைகளாக உருவாகி, நல்லாறு என்ற பெயரில் திருப்பூர் வழியாக பயணித்து, நிறைவாக, 440 ஏக்கர் பரப்பளவுள்ள, நஞ்சராயன் குளத்தை நிரப்பி, மீண்டும் பயணம் செய்து, நொய்யலில் சங்கமிக்கிறது.
ஒரு காலத்தில் நன்னீர் வழிந்தோடி, குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வந்த நல்லாறு, பெருகிய குடியிருப்புகள், தொழிற்சாலைகள் காரணமாக, அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், சாய நீரால், மாசடைந்த ஆறாக மாறியிருக்கிறது.
ஆங்காங்கே புதர்மண்டி, ஆறு, உருக்குலைந்திருக்கிறது. ஆற்றின் பெரும்பகுதி, ஆக்கிரமிப்புகளால் மாயமாகி இருக்கிறது. திருப்பூரை பொறுத்தவரை, அவிநாசி, பூண்டி பகுதியை கடந்து வரும் நல்லாறு, ஆக்கிரமிப்பால் சுருங்கி இருப்பதோடு, புதர்மண்டி, உருக்குலைந்து கிடக்கிறது.
திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர்பாஷா கூறியதாவது:
நல்லாறை ஒட்டிய நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் சரியான திட்டமிடல் இல்லாததால், பல ஆண்டுகளாக, சாக்கடை கழிவுநீர் நல்லாற்றில் கலக்கிறது.
நச்சு கலந்த நீராக, நல்லாறு மாறியிருப்பது, வேதனையளிப்பதாக இருக்கிறது. உள்ளாட்சி நிர்வாகத்தினர், நீர்வளத்துறையினர் உள்ளிட்ட தொடர்புடைய எந்தவொரு துறையினரும் இதை கண்டுக்கொள்வதாக தெரியவில்லை.
எனவே, போர்க்கால அடிப்படையில் நல்லாறை, சுத்தம் செய்யும் பணியை துவக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
'முதல்வரின் முகவரி'யில்
'உறங்குகிறது' மனு
திருமுருகன்பூண்டி மக்கள் சார்பில், நகராட்சி உறுப்பினர் சுப்ரமணியம், கடந்தாண்டு, (2024), ஜூலை, 22ம் தேதி, முதல்வரின் முகவரி திட்டத்தில், மனு வழங்கினார். அதில், திருமுருகன்பூண்டி பகுதியில் நல்லாற்றை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், மாசடைந்துள்ள ஆறால் ஏற்படும் பாதிப்புகளையும் சுட்டிக் காட்டியிருந்தார்.
அதே ஆண்டு, ஆக., 2ம் தேதி, பவானிசாகர் அணைக்கோட்டம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சார்பில் அனுப்பப்பட்ட விளக்க கடிதத்தில், 'நல்லாற்றை சுத்தம் செய்ய அரசிடம் இருந்து, உரிய நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்படும் பட்சத்தில், நல்லாற்றை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என கூறியிருந்தார். ஆனால், ஓராண்டாகியும், இதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என, மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.