Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பூண்டி நகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை: கோடைக்கு முன்பே தலைதூக்கும் பஞ்சம்

பூண்டி நகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை: கோடைக்கு முன்பே தலைதூக்கும் பஞ்சம்

பூண்டி நகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை: கோடைக்கு முன்பே தலைதூக்கும் பஞ்சம்

பூண்டி நகராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை: கோடைக்கு முன்பே தலைதூக்கும் பஞ்சம்

ADDED : ஜன 31, 2024 12:30 AM


Google News
திருப்பூர்;பூண்டி நகராட்சியில் தண்ணீர் பஞ்சம் தலைதுாக்கியுள்ள நிலையில், மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம், நிர்வாகத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.

திருமுருகன்பூண்டி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திருப்பூர் நகரையொட்டியுள்ள பகுதி என்பதால், மக்கள் தொகை அடர்த்தி, இங்கு அதிகம்.

பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து, இரண்டாவது குடிநீர் திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இருப்பினும், 'தேவைக்கேற்ப நீர் வினியோகம் இல்லாததால், 15 முதல், 20 நாள் இடைவெளியில் தான், மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது' என்கின்றனர், நகராட்சி மக்கள்.

'இரண்டாவது குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் குடிநீர் வரத்து, குறைந்திருக்கிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்படுவதில்லை.

கோடை துவங்கும் முன்பே இதுபோன்று, குடிநீர் பற்றாக்குறை தென்படும் பட்சத்தில், கோடை வறட்சி, கடும் பாதிப்பு ஏற்படுத்தும்' என, பூண்டி நகராட்சி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ''திருப்பூர் மாநகராட்சிக்கான நான்காவது குடிநீர் திட்டப்பணி நிறைவு பெற்ற பின், இரண்டாவது குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் குடிநீரை, தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளும்படி, ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ஆனால், அதற்கான சூழல் தென்படவில்லை. திருப்பூர் மாநகராட்சிக்கான அம்ருத் குடிநீர் திட்டத்தின் கீழ், மாநகராட்சிக்கான 5 கி.மீ., துாரத்துக்கான குடிநீர் குழாய், பூண்டி நகராட்சி எல்லை வழியாகத்தான் செல்கிறது; அத்திட்டத்தில் இருந்து எங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கவுள்ளோம்' என்றனர்.

காத்து மட்டும் தான் வருமா?

பூண்டி நகராட்சியில், கடந்த, 10 ஆண்டுகளாகவே, வீட்டுக்கான தனி குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படாத நிலையில், புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்திருந்தன. தற்போது நகராட்சி நிர்வாகம், 160 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியிருக்கிறது. இருக்கின்ற இணைப்புகளுக்கு தேவைக்கேற்ப குடிநீர் இல்லாதபட்சத்தில், புதிய இணைப்புகளில் தண்ணீர் வருமா அல்லது, வெறும் காத்து மட்டும் தான் வருமா என்ற ஏமாற்றம் மக்கள் மத்தியில் தென்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us