Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நாற்றுப்பண்ணைகளில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி தீவிரம்! பருவ மழை துவங்கியதால் விவசாயிகள் ஆர்வம்

நாற்றுப்பண்ணைகளில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி தீவிரம்! பருவ மழை துவங்கியதால் விவசாயிகள் ஆர்வம்

நாற்றுப்பண்ணைகளில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி தீவிரம்! பருவ மழை துவங்கியதால் விவசாயிகள் ஆர்வம்

நாற்றுப்பண்ணைகளில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி தீவிரம்! பருவ மழை துவங்கியதால் விவசாயிகள் ஆர்வம்

ADDED : ஜூன் 08, 2025 10:03 PM


Google News
Latest Tamil News
உடுமலை ; உடுமலை பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், காய்கறி நடவு சீசன் துவங்கியுள்ளதால், நாற்றுப்பண்ணைகளில் தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி பணி தீவிரமடைந்துள்ளது.

உடுமலை பகுதியில், தென்னை, நெல், கரும்பு, மக்காச்சோளம், தானிய பயிர்கள் என சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில், காய்கறி சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி, மிளகாய், கத்தரி, வெண்டை, பீட்ரூட், காலிப்பிளவர் என காய்கறி பயிர் சாகுபடியும் பிரதானமாக உள்ளது.

குறைந்த கால சாகுபடி, மகசூல், வருவாய் என்ற அடிப்படையில், இப்பகுதிகளில், ஏறத்தாழ, 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆண்டு தோறும், ஜூன் மாதம், பருவ மழை துவங்கியதும், விவசாயிகள் காய்கறி சாகுபடியை துவக்கி வருகின்றனர். நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை முன்னதாகவே துவங்கியுள்ள நிலையில், காய்கறி சாகுபடி சீசன் களை கட்டியுள்ளது.

வெண்டை, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறி விதைகளை விவசாயிகள் நேரடியாக வாங்கி, நடவு செய்து வருகின்றனர்.

சாகுபடிக்கு தேவையான தக்காளி, கத்தரி, மிளகாய், காலிப்ளவர் உள்ளிட்ட காய்கறி நாற்றுகள், தனியார் நாற்றுப்பண்ணைகள் வாயிலாக, உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்காக, உடுமலை சுற்றுப்பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட நாற்றுப்பண்ணைகள் உள்ளன. இங்கு, குழித்தட்டுகளில், தென்னை நார் துகள், இயற்கை உரம் நிரப்பி, காய்கறி விதை நடவு செய்து, 20 முதல், 25 நாட்கள் வளர்ந்த நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

சாகுபடி செய்வதற்கு தேவையான நாற்றுகள் வினியோகம் செய்வதற்காக, உடுமலை பகுதியிலுள்ள ஒவ்வொரு நாற்றுப்பண்ணைகளிலும், 10 லட்சம் முதல், 50 லட்சம் நாற்றுகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக உள்ளது.

70 சதவீதம் தக்காளி நாற்றுகள்


காய்கறி உற்பத்தியில், தக்காளி சாகுபடி இப்பகுதிகளில் பிரதானமாக உள்ளது. வெயில், மழைக்கு அழுகாதது, அழகு மற்றும் கெட்டியான தோல், சரக்கு போக்குவரத்தின் போது பாதிக்காத ரகம் என, பல்வேறு ரகங்கள் உள்ளன.

இதனால், நாற்றுப்பண்ணைகளில், 70 சதவீதம் தக்காளி நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்தாண்டு, மிளகாய்க்கு சராசரியான விலை கிடைத்து வந்ததால், நடப்பு சீசனில் மிளகாய் சாகுபடியிலும், கத்தரி சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறியதாவது: தென் மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், நாற்றுப்பண்ணைகளில், தக்காளி, கத்தரி, மிளகாய், காலிப்பிளவர் உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

தக்காளி நாற்றுகள் ஒரு ஏக்கருக்கு, 10 ஆயிரம் வரையும், கத்தரி, 5 ஆயிரம், மிளகாய், 7 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். சீசன் துவங்கியுள்ளதால், உற்பத்தியும், நடவும் அதிகரித்துள்ளது.

தக்காளி நாற்று, ரகத்திற்கு ஏற்ப, 60 முதல் 90 பைசா வரையும், பந்தல் சாகுபடியில் ஆப்பிள் வகை தக்காளி நாற்று செய்யவும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகை நாற்று, ஒரு ரூபாய்க்கு விற்கிறது.

அதே போல், மிளகாய், 80 முதல் 90 பைசா வரையும், கத்தரி, 70 பைசாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி அதிக பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்பதால், நாற்றுப்பண்ணைகளில் தக்காளி நாற்றுகள், விவசாயிகள் விரும்பும் ரகங்களில், தேவைக்கு ஏற்ப, ஏழு வகையான ரக நாற்றுகள் உற்பத்தி செய்து வழங்கப்படுகிறது.

தற்போது, நடவு துவங்கியுள்ள நிலையில், ஜூலை வரை தக்காளி சாகுபடியும், ஆண்டு முழுவதும் கத்தரி, மிளகாய் சாகுபடியும் மேற்கொள்ளப்படும் என்பதால், உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தக்காளி நடவு செய்த, 60 முதல், 70 நாட்களில் காய்க்க துவங்கி, 110 நாட்கள் வரை மகசூல் கிடைக்கும். மற்ற நாற்றுக்களும், 60 நாட்கள் முதல் பலன் கொடுக்க துவங்கும்.

இவ்வாறு, நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us