ADDED : ஜூன் 21, 2025 12:45 AM
திருப்பூர் : திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபரிடம் 20 லட்சம் ரூபாய் ஆன்லைன் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் டெலிகிராம் செயலியில் வந்த பங்குச்சந்தை முதலீடு விளம்பரத்தை பார்த்து அதில் பணம் முதலீடு செய்தார். அவ்வகையில் பல தவணைகளில் அவர் 19.54 லட்சம் ரூபாய் முதலீடாக, சில வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.
பின்னர் அவரது 'வாலெட்'டில் லாபம் சேர்ந்ததாக தகவல் வந்துள்ளது. அந்த தொகையை அவர் எடுக்க முயன்ற போது, பல்வேறு காரணங்களுக்காக மீண்டும் பணம் செலுத்துமாறு தகவல் வந்தது.இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து அவர், திருப்பூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் வழக்குபதிவு செய்து விசாரித்த போலீசார், சூரிய பிரகாஷ், பிரகாஷ் மற்றும் அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் விபின் தாஸ் மற்றும் முனாஸ் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்திய போலீசார் அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.