/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொழுமத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள் கொழுமத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கொழுமத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கொழுமத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கொழுமத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : செப் 21, 2025 10:55 PM

உடுமலை; உரிய ஏற்பாடுகள் செய்யாதால், கொழுமம் அமராவதி ஆற்றங்கரைக்கு திதி கொடுக்க வந்த மக்கள் திணறினர்; பிரதான ரோட்டிலும் போக்குரத்து ஸ்தம்பித்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உடுமலையில் இருந்து நெய்க்காரப்பட்டி வழியாக பழநி செல்லும் ரோட்டில் கொழுமம் அமைந்துள்ளது. அமராவதி ஆற்றங்கரையில் இப்பகுதியில், பழமையான கோவில்கள் உள்ளன.
அமாவாசை நாட்களில் ஆற்றங்கரையில் முன்னோருக்கு திதி கொடுக்கவும், பழமையான கோவில்களில் வழிபாடு செய்யவும் அதிகளவு மக்கள் அப்பகுதிக்கு வந்து செல்வார்கள்.
குறிப்பாக, மகாளய அமாவாசையன்று, ஆற்றுப்பாலத்துக்கு முன் ஆற்றங்கரையில், திதி, தர்ப்பணம் கொடுக்கவும், ஆற்றில் நீராடவும், பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூடுவது வழக்கம்.
இந்தாண்டு ஆற்றங்கரை பகுதியில் குமரலிங்கம் பேரூராட்சி, போலீசார், பொதுப்பணித்துறை மற்றும் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. இதனால், ஆற்றங்கரையிலும் மக்கள் தவித்தனர்.
மேலும், கொழுமம் வழியாக பழநி செல்லும் ரோட்டில், போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஆற்றங்கரையையொட்டி ரோட்டின் இருபுறங்களிலும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால், மெயின்ரோட்டில் எவ்வித வாகனங்களும் செல்ல முடியாமல் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நெரிசல் நீடித்தது.
கொழுமம் முதல் குமரலிங்கம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றும் போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முக்கிய விசேஷ நாட்களில், கொழுமம் ஆற்றங்கரையிலும், பழநி ரோட்டிலும் பல்வேறு பாதிப்புகளை மக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். விழாக்களின் போது, அங்கு வரும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து பாதிக்காமல் இருக்கவும், தேவையான நடவடிக்கைகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தின் வாயிலாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.