/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பூண்டி கோவில் அருகே கழிப்பறை ஓர் ஆண்டுக்குப் பின் அனுமதி; ஆனால், திரும்பிச் சென்ற நிதியால் சிக்கல் பூண்டி கோவில் அருகே கழிப்பறை ஓர் ஆண்டுக்குப் பின் அனுமதி; ஆனால், திரும்பிச் சென்ற நிதியால் சிக்கல்
பூண்டி கோவில் அருகே கழிப்பறை ஓர் ஆண்டுக்குப் பின் அனுமதி; ஆனால், திரும்பிச் சென்ற நிதியால் சிக்கல்
பூண்டி கோவில் அருகே கழிப்பறை ஓர் ஆண்டுக்குப் பின் அனுமதி; ஆனால், திரும்பிச் சென்ற நிதியால் சிக்கல்
பூண்டி கோவில் அருகே கழிப்பறை ஓர் ஆண்டுக்குப் பின் அனுமதி; ஆனால், திரும்பிச் சென்ற நிதியால் சிக்கல்
ADDED : மார் 25, 2025 06:58 AM
திருப்பூர்; பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், பக்தர்கள் வசதிக்காக கழிப்பறை கட்டும் பணி மேற் கொள்ள, பூண்டி நகராட்சிக்கு, கோவில் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றான திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு தினமும், நுாற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கில் திரள்கின்றனர். 'கோவிலுக்கு வந்து செல் லும் பக்தர்கள் நலன் கருதி, கழிப்பறை அமைத்துக் கொடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை, நீண்ட காலமாக இருந்தது.
கழிப்பறை கட்ட, கடந்தாண்டே, பூண்டி நகராட்சி நிர்வாகம் சார்பில், துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், 40 லட்சம் ரூபாய் நிதியும் பெறப்பட்டது. நகராட்சி சார்பில் கழிப்பறை கட்டுமானப்பணி மேற்கொள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி தேவை என்ற நிலையில், பூண்டி நகராட்சி நிர்வாகம் சார்பில், கோவில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் வழங்கியது.
ஆனால், கடந்த ஓராண்டாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்திய ஹிந்து சமய அறநிலையத்துறை, தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக கோவில் செயல் அலுவலர், பூண்டி நகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ''ஹிந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்கு உட்பட்ட திருமுருகநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக, கழிப்பறை கட்டும் பணி மேற்கொள்ள, திருமுருகன்பூண்டி நகராட்சி துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, பூண்டி நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
பூண்டி கோவில் வளாகத்தில் கழிப்பறை அமைக்க, கடந்த ஓராண்டுக்கு முன்பே நிதி ஒதுக்கீடு பெற்று, கட்டுமானப்பணி மேற்கொள்ள அனுமதி கேட்டு, கோவில் நிர்வாகத்தினருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், அனுமதி வழங்கவில்லை. ஏறத்தாழ, ஓராண்டு காலம் கடந்து, தற்போது அனுமதி வழங்கியுள்ளனர். நிதி ஒதுக்கீடு பெற்ற பின், கட்டுமானப் பணியை உரிய தேதியில் துவங்கி, உரிய தேதியில் முடிக்க வேண்டும்.
ஆனால், அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அதற்கென ஒதுக்கப்பட்ட நிதி, திரும்ப சென்றுவிட்டது. மீண்டும் நிதி பெற நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.