பள்ளி வளாகத்தில் புகையிலைக்கு தடை
பள்ளி வளாகத்தில் புகையிலைக்கு தடை
பள்ளி வளாகத்தில் புகையிலைக்கு தடை
ADDED : ஜூன் 07, 2025 12:18 AM

திருப்பூர்,; 'பள்ளி படிக்கும் மாணவர்களே, போதை தரும் புகையிலை பொருட்களை பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர்' என ஆசிரியர்களே புலம்பும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.
போதையால் திசை மாறி செல்லும் மாணவ சமுதாயத்தினரின் எதிர்காலம், இருண்ட வாழ்க்கையை அவர்களுக்கு பரிசாக தந்து கொண்டிருக்கிறது என்பதே, ஆசிரியர்களின் ஆதங்கம்.
இதை உணர்ந்த அரசு, மாணவ சமுதாயத்தினர் போதை பழக்கத்துக்கு செல்லாமல் இருக்க, போதை வஸ்துகளின் புழக்கத்தை கட்டுப்படுத்த முனைப்புக் காட்டி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, அரசு பள்ளிகளை ஒட்டி, 300 மீ., தொலைவில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருக்கிறது.
உலக புகையிலை தினத்தை முன்னிட்டு, திருப்பூர் நஞ்சப்பா உயர்நிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி, 300 மீ., சுற்றளவில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ஜெயந்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின், பள்ளி நுழைவு வாயிலில் இருந்து, 300 அடி தொலைவில், புகையில்லா வளாகம் என மஞ்சள் கோடு வரையப்பட்டது.இந்நிகழ்வின் போது, மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் கலைச்செல்வன், மாவட்ட நேர்முக உதவியாளர் செல்வராஜ், நலக்கல்வியாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் டாக்டர் சவுமியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.