Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'தமிழ்த்தாய்' மகுடம் சூடிய திருப்பூர் தமிழ்ச்சங்கம்!

'தமிழ்த்தாய்' மகுடம் சூடிய திருப்பூர் தமிழ்ச்சங்கம்!

'தமிழ்த்தாய்' மகுடம் சூடிய திருப்பூர் தமிழ்ச்சங்கம்!

'தமிழ்த்தாய்' மகுடம் சூடிய திருப்பூர் தமிழ்ச்சங்கம்!

ADDED : பிப் 25, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் கேட்க விரும்பினார் மகாகவி பாரதி.

உலகெங்கும் ஆடைக்கு நுால் பரப்பும் தொழிலில் கோலோச்சிக் கொண்டிருக்கும் திருப்பூரில், தமிழ் வளர்க்கும் நுால்களையும், உலகெங்கும் பரவி வாழும் படைப்பாளிகளை போற்றி கொண்டாடிக் கொண்டிருக்கிறது, 'திருப்பூர் தமிழ்ச்சங்கம்.'கடந்த, 31 ஆண்டு காலமாக தமிழ் வளர்க்கும் இச்சங்கத்தின் பணிக்கு அங்கீகாரமாக, மாநில அரசின் தமிழ் வளர்ச்சித்துறை, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழுடன் கூடிய, 'தமிழ்த்தாய்' விருது வழங்கி பெருமை சேர்த்திருக்கிறது. அமைச்சர் சாமிநாதனிடம், திருப்பூர் தமிழ்ச்சங்க தலைவர் முருகநாதன், செயலாளர் மோகன் கார்த்திக், பொருளாளர் முருகேசன் ஆகியோர் விருது பெற்று திரும்பியுள்ளனர்.

இவர்கள் நம்முடன் பகிர்ந்தவை:

தமிழ்நாடு இயல், இசை, நாடக சங்கத்துடன் இணைந்து, முத்தமிழ்த்துறை சார்ந்த நிகழ்ச்சிகளை, திருப்பூரில் நடத்தியுள்ளோம். உலகின் பல நாடுகளில் உள்ள தமிழ்ச்சங்க அமைப்பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்களை உள்ளடக்கி புதிய கூட்டமைப்பு உருவாக்கியுள்ளோம். ஆண்டுதோறும் சிறந்த படைப்புகள், படைப்பாளிகளை தேர்வு செய்து, இலக்கிய விழா நடத்தி வருகிறோம்.இதுவரை வேறெந்த அமைப்புகளும், இவ்வளவு பரிசுகளை வழங்கியதில்லை என, பரிசு பெற்றோரே பெருமைப்படும் வகையில், படைப்பாளிகள், மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கிறோம். திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பில் விருது பெற்ற படைப்பாளிகள் பலர், பின்னாளில் தமிழக அரசின் சாகித்ய அகாடமி என்ற உயரிய விருது பெற்று, உலகம் போற்றும் படைப்பாளிகளாக வலம் வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

எம்.பி., கனிமொழி, இறையன்பு, பழ.நெடுமாறன், சிற்பி பாலசுப்ரமணியம், வாகை திருநாவுக்கரசு, நாஞ்சில் நாடன் உள்ளிட்ட பலருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளோம்.

திருப்பூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில், தொலைக்காட்சி பெட்டி நிறுவி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறோம்; இது, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் தமிழார்வத்தை துாண்ட, பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித்துறை வழங்கிய தமிழ்த்தாய் விருது, எங்களின் செயல்பாடை ஊக்குவிப்பதாக இருக்கிறது.

-----

திருப்பூர் தமிழ்ச்சங்கத்துக்கு மாநில அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 'தமிழ்த்தாய்' விருது வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சாமிநாதனிடம் இருந்து இச்சங்கத் தலைவர் முருகநாதன், செயலாளர் மோகன் கார்த்திக், பொருளாளர் முருகேசன் ஆகியோர் விருது பெறுகின்றனர்.

தமிழ் கற்றுத்தர தயார்

'நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக, திருப்பூரில் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பும் பிற மாநில அதிகாரிகள், தொழில் முனைவோருக்கு தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக, நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக தமிழ் கற்றுத்தருகிறோம்; விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்' எனவும், தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us