/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூர் பஹூத் அச்சா லக்தா ஹை.. மனம் திறந்த வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் பஹூத் அச்சா லக்தா ஹை.. மனம் திறந்த வட மாநில தொழிலாளர்கள்
திருப்பூர் பஹூத் அச்சா லக்தா ஹை.. மனம் திறந்த வட மாநில தொழிலாளர்கள்
திருப்பூர் பஹூத் அச்சா லக்தா ஹை.. மனம் திறந்த வட மாநில தொழிலாளர்கள்
திருப்பூர் பஹூத் அச்சா லக்தா ஹை.. மனம் திறந்த வட மாநில தொழிலாளர்கள்

'வந்தாரை வாழ வைக்கும் ஊர்' திருப்பூர்; முன்பு தமிழகத்தில் உள்ள வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டும் நிறைந்திருந்த திருப்பூர், தற்போது பெரும்பாலான மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களையும், தாய் போல், அரவணைத்திருக்கிறது.
குறிப்பாக, இங்கு வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களிடம் பேசும்போது, 'திருப்பூர் பஹூத் அச்சா லக்தா ஹை'(திருப்பூர் ரொம்பப் பிடிக்கும்) என்று மனம் திறக்கின்றனர்.
திருப்பூர், பல்லடம் ரோடு - தட்டான்தோட்டம் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் பீஹார் மாநிலம், பைசாலி பகுதியை சேர்ந்த தொழிலாளி சுதீக்குமார் என்பவர், சக தொழிலாளர்களுடன் இணைந்து 'கேக்' வெட்டி கொண்டாடினார்.
பீஹாரில் உள்ள அவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகனை இனிமேல்தான் சுதீக்குமார் பார்க்கச் செல்ல வேண்டும். மகன் பிறந்த சந்தோஷத்தை, தன் முதலாளி, அதிகாரிகளுக்கும் கேக் வழங்கி பகிர்ந்து இங்கே கொண்டாடியது சக தொழிலாளர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.
இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் நாமும் பேசினோம். அனைத்து தொழிலாளர்களுமே, 'திருப்பூர் பஹூத் அச்சா லக்தா ஹை' (திருப்பூர் ரொம்பப் பிடிக்கும்) என்று கூறுகின்றனர்; உள்ளத்தில் இருந்து வெளிவந்த வார்த்தைகள் அவை.
மகன் திருப்பூரில்படிப்பான்
சுதீக்குமார், பைசாலி, பீஹார்:
என் பெற்றோர் பீஹாரில் வசிக்கின்றனர்; அப்பா, லாரி டிரைவர்; உறவினர்கள் அழைத்ததால், 2018ல் திருப்பூர் வந்தேன்; எம்ப்ராய்டரிங் மெஷின் இயக்க கற்றுக்கொண்டேன். எனக்கு 2021ல் திருமணம் ஆனது; மனைவி ஊரில் இருக்கிறார்; மகன் வளர்ந்ததும், எனது குடும்பமும் திருப்பூருக்கே வந்துவிடும். திருப்பூரில் ரோட்டோர வியாபாரிகள் கூட ஹிந்தி பேசுகின்றனர். நானும் தமிழ் பேச ஆர்வமாக பயிற்சி எடுத்து வருகிறேன். என் மகன் திருப்பூரில் தான் படிக்கப்போகிறான்.
எங்கள் ஊரைப் போன்றே...
சாகர், பாரிபதான், ஒடிசா:
திருப்பூரில் உள்ள என் அத்தை, மாமா கூறியதால், 2012 நவ., மாதம் திருப்பூர் வந்தேன். அப்பா, அம்மா எல்லோரும் சொந்த ஊரில் உள்ளனர். அங்கு, விவசாயம் மட்டுமே தொழிலாக உள்ளது; வேறு வேலைவாய்ப்பு இருக்கிறது. அப்படியே வேலை கிடைத்தாலும், இவ்வளவு சம்பளம் கிடைப்பதில்லை.
முதலில், உதவியாளராக இருந்தேன். பின், பனியன் தொழிலில் ஒவ்வொரு பிரிவு வேலையையும் கற்றுக்கொண்டேன். தமிழ் பேசாமல் இருந்தால், வெளியே சென்றுவர முடியாது என, படிப்படியாக தமிழ் பேச கற்றுக்கொண்டேன். அதன்பின், எனக்கு எவ்வித தடையும் இல்லை. எங்கள் ஊரில் இருப்பது போலவே உணர்கிறோம்.

அரசு சலுகைகள் அதிகம்
வினோத்குமார் ராம், பைசாலி, பீஹார்:
திருப்பூர் போனால், கை நிறைய சம்பளம் கிடைக்கும்னு சொன்னாங்க. நானும், 2013ல் வந்து விட்டேன். தட்டான்தோட்டம் பகுதியில் தான் வாடகை வீட்டில் இருக்கிறேன். பெரிய மகன், என் பெற்றோருடன் இருக்கிறான்; ஐந்து வயது மகன் எங்களுடன் இருக்கிறான்; விரைவில், அரசு பள்ளியில் சேர்க்கப்போகிறோம்.
இங்கு அரசும், மக்களுக்கு அதிக சலுகைகளை வழங்குகின்றன. சொந்த ஊர் செல்ல, நான்கு நாள்; வருவதற்கு நான்கு நாள் ஆகும். அங்கு, இரண்டு மாதம் வரை தங்கியிருப்போம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சொந்த ஊர் சென்று வருகிறேன். தமிழ் பேசி பழகிய பிறகு எனக்கு வெளியே சென்றுவர எவ்வித பிரச்னையும் இல்லை.
பெண்களுக்குஅச்சமில்லை
சுமித்ரா, பீஹார்:
எனக்கு திருமணமான பின், சில மாதங்கள் கணவரை பிரிந்து பீஹாரில் இருந்தேன். குழந்தை பிறந்த பிறகு, திருப்பூர் வந்துவிட்டேன். திருப்பூரில் பெண்கள் தைரியமாக வெளியே சென்று வரலாம்; அச்சமில்லை. அருகே வசிப்பவர்களும், 'இந்திக்காரங்க' என்று அழைக்கின்றனர்; நன்றாக பழகுகின்றனர்.
கணவருக்கு தமிழ் பேச தெரியும்; நானும் கொஞ்சம் பேசி பழகிவிட்டேன். வாரத்தில் ஒரு நாள், ஞாயிற்றுக்கிழமை வெளியே ஷாப்பிங் சென்று, அனைத்து பொருட்களையும் வாங்கி வருகிறோம். பொழுதுபோக்குக்கு திருப்பூரில் உள்ள சினிமா தியேட்டர்களுக்கு அடிக்கடி செல்கிறோம்.
- நமது நிருபர் -