ADDED : ஜன 02, 2024 11:52 PM

அனுப்பர்பாளையம்;தேசிய அளவிலான போட்டியில், சாதித்த அரசு பள்ளி மாணவிக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய அளவிலான, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான தடகள போட்டிகள், டிச., 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை உ.பி., மாநிலம், லக்னோவில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து, 2 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், தமிழக அணி சார்பில் பங்கேற்ற, திருப்பூர் - அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி மெகிடா எபிபனி, 14, என்ற மாணவி, 80 மீட்டர் பிரிவு தடை தாண்டும் ஓட்ட போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியின் சார்பில், பாராட்டு விழா நேற்று காலை பள்ளியில் நடைபெற்றது. முன்னதாக மாணவியை, வேலம்பாளையம் சிறு பூலுவபட்டி பிரிவில் இருந்து, தாரை, தப்பட்டை முழங்க மாலை அணிவித்து வாகனத்தில் சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
பள்ளி அருகே சென்றதும், சாதித்த மாணவிக்கு ஆசிரியர்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். அதன்பின், நடந்த பாராட்டு விழாவில், தலைமையாசிரியர் கனிமொழி, 11வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், பயிற்சியாளர் பிரபு, மற்றும் பள்ளி வளர்ச்சி குழு, மேலாண்மை குழு மற்றும் பி.டி.ஏ., நிர்வாகிகள் பங்கேற்றனர். விழாவில், பேசிய அனைவரும் மாணவி மெகிடா எபிபனியின் சாதனையை பாராட்டி, தொடர்ந்து பல சாதனை புரிய வாழ்த்தினர்.
மாணவிக்கு நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. சாதித்த மாணவியின் தந்தை தேவராஜ், டிரைவராக பணியாற்றி வருகிறார்.