Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'அசையாத' துாண்டில் அதலபாதாளத்தில் சரிந்த தொகை; மீன் மார்க்கெட் ஏலத்தில் அதிர்ச்சி

'அசையாத' துாண்டில் அதலபாதாளத்தில் சரிந்த தொகை; மீன் மார்க்கெட் ஏலத்தில் அதிர்ச்சி

'அசையாத' துாண்டில் அதலபாதாளத்தில் சரிந்த தொகை; மீன் மார்க்கெட் ஏலத்தில் அதிர்ச்சி

'அசையாத' துாண்டில் அதலபாதாளத்தில் சரிந்த தொகை; மீன் மார்க்கெட் ஏலத்தில் அதிர்ச்சி

ADDED : ஜூன் 06, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மீன் மார்க்கெட் வளாக ஏலம் கேட்பாரற்ற நிலையில், அரசு மதிப்பை விட 55 சதவீதம் குறைந்த தொகைக்கு கோரப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மீன் மார்க்கெட் வளாகம் தென்னம்பாளையம் சந்தை வளாகம் அருகே அமைந்துள்ளது. நீண்ட காலமாக எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வளாகம் செயல்பட்டு வந்தது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் 2.2 கோடி ரூபாய் மதிப்பில் 28 கடைகள் கொண்ட புதிய வளாகம் 505 சதுர மீட்டர் பரப்பில், சிமென்ட் ஷீட் கூரை அமைப்புடன் கட்டப்பட்டது.

வாகன பார்க்கிங், தண்ணீர் வசதி, மின் இணைப்புகள், விளக்கு மற்றும் மின் விசிறிகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

கட்டி முடிக்கப்பட்ட புதிய மீன் மார்க்கெட் வளாகத்தை கடந்த 2022ம் ஆண்டில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அன்று கடும் போட்டி


வளாகம் மூன்றாண்டு கால குத்தகை அடிப்படையில் ஏலம் விடப்பட்டது. கடும் போட்டிக்கிடையே இதற்கான ஏலம் நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் ஏலத் தொகை முடிவு செய்த பின், கூடுதல் தொகை செலுத்தி மறு ஏலம் கோரப்பட்டது. இறுதியில் ஆண்டுக்கு 1.41 கோடி ரூபாய் என அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனது. அதன் பின் இந்த குத்தகை ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரிப்பு என்ற அடிப்படையில், கடந்தாண்டு 1.70 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. குத்தகை காலம் நிறைவு பெற்றது. தற்போது இதன் ஏலத் தொகை, 1.78 கோடி என்றளவில் அமைய வேண்டும்.

18 முறை அறிவித்தும்ஒருவர் கூட வரவில்லை


அடுத்த கட்டமாக 3 ஆண்டுக்கு இதன் ஏலம் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏலம் 18 முறை அறிவிக்கப்பட்டும் ஒருவர் கூட முன் வரவில்லை.

இறுதியாக டெண்டர் விடப்பட்ட போது, 82.10 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்து, முந்தைய ஏலதாரரே விண்ணப்பித்தார். அவரைத் தவிர வேறு யாரும் முன் வரவில்லை.

மாநகராட்சி நிர்வாகம் நேரடியாக இதை வாடகைக்கு விட்டு ஊழியர் நியமித்தாலும், குறிப்பிட்ட அளவு வருவாய் பெற முடியாது என்ற நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அந்த தொகைக்கு மீன் மார்க்கெட் ஏலத்தை முடிவு செய்தது.

ஆண்டுதோறும் 5 சதவீதம் உயர வேண்டிய ஏலத் தொகை தற்போது 55 சதவீதம் குறைந்து விட்டது. வருவாய் அதிகரிக்கும் நோக்கில் கட்டப்பட்ட மீன் மார்க்கெட் ஏலத்தொகை சரிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய மீன் மார்க்கெட் வளாகம் 2.2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டும், கடந்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 4.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியும் வந்துள்ளது. ஆனால், இந்த வளாகத்துக்குள் மீன் வியாபாரிகள் இது வரை கடையைத் திறக்கவில்லை என்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள வளாகம், மீன் விற்பனைக்கும், வாடிக்கையாளர் வந்து செல்லவும், மீன் லோடு கொண்டு வந்து இறக்கவும் வசதியாக உள்ளது. புதிய வளாகத்தில் வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் குறைவு; கடை உயரம் அதிகம் போன்ற சில காரணங்களால் இது வரை அங்கு கடைகள் கொண்டு செல்லப்படவில்லை. தற்போதும் இந்த வளாகம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், டிரைவர்கள் ஓய்வெடுக்கும் பகுதியாகவும் தான் பயன்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us