/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மறியல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைதுமறியல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது
மறியல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது
மறியல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது
மறியல் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது
ADDED : ஜன 31, 2024 01:06 AM

திருப்பூர்;'புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடவேண்டும்,' என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜாக்டோ - ஜியோ சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூரில், கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், கிராம உதவியாளர், ஊர்ப்புற நுாலகர், கல்வித்துறைதுப்புரவு பணியாளர், சிறப்பு ஆசிரியர், மருத்துவமனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி ஆசிரியர், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.
அரசு துறையில் 30 சதவீதத்துக்கும் மேல் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை, நிரப்பவேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கவேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், திருப்பூர் - பல்லடம் ரோட்டில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 300 பெண்கள் உட்பட 550 பேரை கைது செய்த போலீசார், திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.