ADDED : பிப் 06, 2024 12:48 AM
திருப்பூர்;பல்லடத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி மார்க்கெட் கடைகளை ஏலம் விடுவது தொடர்பாக முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என புகார் எழுந்துள்ளது.
பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:
பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் குத்தகை இனங்களுக்கான பொது ஏலம், வரும், 8ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, நகராட்சி சார்பில், விளம்பரம் செய்யப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலம் விடாததால், கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்லடம் நகராட்சியே முறைகேடு செய்து, கழிப்பிடத்தை நடத்தி வருகிறது. பஸ் நுழைவு கட்டண வசூல் செய்து, நகராட்சி கடைகளை பொது ஏலம் விடப்படாததால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. பொது ஏலம் நடத்தி, வருவாய் இழப்பு ஏற்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளார்.
பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி கூறியதாவது:
பல்லடத்தில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, 48 கடைகளுடன் தினசரி சந்தை கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏலம் விடப்பட்டபோது, நான்கு வியாபாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இரண்டாவதாக தற்போது ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து அனைத்து வியாபாரிகள், பொதுமக்களுக்கும் முறையாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது; விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்டில் உள்ள நவீன கழிப்பிடத்தை அதிக தொகைக்கு ஏலம் எடுத்தவர், நஷ்டம் ஏற்பட்டதால், கைவிட்டுவிட்டார். வேறுயாரும் முன்வராததாலேயே, நகராட்சி நிர்வாகம் கழிப்பிடத்தை நடத்தி வருகிறது. பஸ்களின் வருகை குறைவால், நுழைவு கட்டணம் வசூலுக்கான ஏலம் எடுக்க யாரும் முன்வருவதில்லை. புகார் கூறும் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர், தாராளமாக ஏலத்தில் பங்கேற்கலாம்; அதிக தொகைக்கு ஏலம் எடுத்தால், நகராட்சிக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.