/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கர்ணனை கண்முன் வரவழைத்த கலைஞர்கள்...கர்ணனை கண்முன் வரவழைத்த கலைஞர்கள்...
கர்ணனை கண்முன் வரவழைத்த கலைஞர்கள்...
கர்ணனை கண்முன் வரவழைத்த கலைஞர்கள்...
கர்ணனை கண்முன் வரவழைத்த கலைஞர்கள்...
ADDED : ஜன 27, 2024 11:35 PM

''24 மணி நேரமும், 'பிஸி, பிஸி' என சொல்லும் திருப்பூர்வாசிகள், இயந்திரத்தனமான வாழ்க்கை சூழலில் கூட, நான்கு மணி நேரம் ஒரு மேடை நிகழ்ச்சியை, அதுவும், சரித்திர கதை தாங்கிய நாட்டிய நாடகத்தை, ரசிப்பதென்பது, கற்பனை கெட்டாதது. ஆனால், அது இங்கே, நிகழ்ந்திருக்கிறது,'' என புளகாங்கிதப்பட்டுப் போனார், தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ்.
ஏறத்தாழ, 1,200 பார்வையாளர்களை, 4 மணி நேரம் கட்டிப் போட்ட அந்நிகழ்ச்சி, கவிநயா நாட்டியாலயா குழுவினர் அரங்கேற்றிய 'மாவீரன் கர்ணன்' என்ற நாட்டிய நாடகம் தான்.
திருப்பூர், அவிநாசி ரோட்டிலுள்ள பிஷப் உபகாரசாமி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடந்த நாட்டிய நாடகத்தில் பங்கேற்ற, 140 கலைஞர்களும், தங்களின் முகபாவனை, நடன அசைவுகளில், மகாபாரத கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்தி, பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர்.
நடன கலைஞர்களால் அரங்கேற்றப்பட்ட குருேஷத்திர போர்க்காட்சிகளின் பிரம்மாண்டம், பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து சேர்த்தது. மாவீரன் கர்ணனின் கடைசி அத்தியாயத்தில் பங்கேற்ற மாணவியரின் தத்ரூப நடிப்பில், நெகிழ்ந்து போன பார்வையாளர்களின் கண்கள் குளமாகின.
பெற்றோர் கூறுகையில், 'ஒவ்வொரு தாய், தந்தைக்கும், தம் குழந்தைகள், ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் போது கூட பேரானந்தம் பெறுவார்கள். அந்த வகையில் எங்கள் குழந்தை ஏற்று நடித்த கதாபாத்திரம், ஆனந்த கண்ணீரை வரவழைத்தது' என, நெகிழ்ந்தனர்.
நாட்டிய நாடகம் குறித்து, நாட்டிய பள்ளி நிறுவனர் மேனகா கூறியதாவது:
தமிழகத்தின் பாரம்பரிய கலையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி தான் இது. இக்கால குழந்தைகளுக்கு, சரித்திர கதைகளை கற்றுத்தர பெற்றோருக்கு நேரமில்லை. அந்த குறையை நாங்கள் போக்கியுள்ளோம்.
சரித்திர கதைகளை, இளம் தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது, எங்களின், முதல் சொந்த தயாரிப்பு. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர், கடந்த, 6 மாதமாக கடும் பயிற்சி மேற்கொண்டனர்; அதன் விளைவாக, மேடையில், கதாபாத்திரமாகவே வாழ்ந்து காண்பித்தனர். பார்வையாளர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டு, வரும் நாட்களிலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதிகளவில் நடத்த வேண்டும் என்ற உந்துதலை தருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.