ADDED : ஜூன் 01, 2025 11:15 PM
உடுமலை : கோடை மழைக்கு பயறு வகைகளை விதைத்து, உழவு செய்வதால், மண் வளம் பாதுகாக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இதில், ஒவ்வொரு மண்டல பாசனத்துக்கும், இரண்டு ஆண்டுகள் வரை இடைவெளியாகிறது. அப்போது கிணற்றுப்பாசனத்துக்கும், மழையை அடிப்படையாக கொண்டும், மானாவாரி சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, சுழற்சி முறையில் சாகுபடி செய்யும் போது, மண் வளம் குறைகிறது. இதை தவிர்க்க, பல்வேறு உரங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், மண்வள குறைபாட்டால், மகசூல் பாதிக்கிறது.
இதைத்தவிர்க்க கோடை உழவுக்கு வேளாண்துறை விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குகிறது. அதன்படி, கோடை மழைக்கு கிடைத்த ஈரப்பதத்தை பயன்படுத்தி, தட்டை உட்பட பயறு வகைகளை விவசாயிகள் விதைத்தனர்.
அச்செடிகள் பூக்கும் தருணத்தில், மடக்கி உழவு செய்து வருகின்றனர். இதனால், மண் வளம் அதிகரிப்பதுடன், பல்வேறு புழு தாக்குதலும் கட்டுப்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.