ADDED : ஜன 31, 2024 12:37 AM
மருத்துவர்களுக்கு நினைவஞ்சலி
கடந்த, 2020- 21ம் ஆண்டு கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தாக்குதலின்போது எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்பட்டன. இக்காலகட்டத்தில், உயிர் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற மருத்துவர்கள், செவிலியர்களும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இறந்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, இந்திய மருத்துவர் சங்கத்தின் சார்பில், பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில் நேற்று நடந்தது. இந்திய மருத்துவ சங்க செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மருத்துவர்கள் பாலமுருகன், ராஜேஸ்வரி மற்றும் செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
---
சுகாதார பணிக்கு வாகனங்கள்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் துாய்மை பணிக்குப் பயன்படுத்தும் வகையில், மத்திய நிதிக்குழு மானியத்தில் 30 ஆட்டோ, குப்பை கழிவுகள் சேகரிக்கும் பணிக்கு வாங்கப்பட்டுள்ளன. அதேபோல், வார்டு தோறும் கொசுக்கள் ஒழிக்கும் சுகாதார நடவடிக்கைக்காக, புகை மருந்து அடிக்கும் கருவிகள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன. புதிய வாகனங்கள் மற்றும் கருவிகளை பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, நேற்று மாநகராட்சி மாட்டுக் கொட்டகை வளாகத்தில் நடந்தது. இவற்றை, கமிஷனர் பவன்குமார் முன்னிலையில் மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
---
மத நல்லிணக்க உறுதி மொழி
தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. காந்தி நினைவு நாளை முன்னிட்டு, நடப்பாண்டு தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பில், அலங்கரித்து வைத்திருந்த காந்தி படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டு, மத நல்லிணக்கம் பேணும் உறுதி மொழி ஏற்பு நடந்தது. தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ், மாநகர் மாவட்ட காங்., தலைவர் கிருஷ்ணன், கம்யூ,, உட்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
---
உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள்
காந்தி நினைவு நாள் முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும். அவ்வகையில், நேற்று திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கமிஷனர் பவன்குமார் உறுதிமொழி வாசித்தார். மாநகராட்சி அலுவலர் மற்றும் ஊழியர்கள் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர். மாநகர பொறியாளர் லட்சுமணன், உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.
---
மழைநீர் வடிகால் அமைக்க நிதி
திருப்பூர், அம்மாபாளையம் பகுதியில், நமக்கு நாமே திட்டத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம், ராமகிருஷ்ணா பள்ளி முதல், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் வரை, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, திருப்பூர் சிட்டி கிளப் சார்பில், பங்களிப்பு தொகையாக, 50 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலையை அதன் நிர்வாகிகள், நகராட்சி நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.
---
திருப்பூர், அம்மாபாளையம் பகுதியில், நமக்கு நாமே திட்டத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம், ராமகிருஷ்ணா பள்ளி முதல், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் வரை,'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, திருப்பூர் சிட்டி கிளப் சார்பில், பங்களிப்பு தொகையாக, 50 ஆயிரம் ரூபாய்க்கான வரைவோலையை அதன் நிர்வாகிகள், நகராட்சி நிர்வாகத்தினரிடம் வழங்கினர்.