Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...

சில வரி செய்திகள்...

ADDED : ஜன 12, 2024 12:26 AM


Google News

மதுக்கடைக்கு 3 நாள் விடுமுறை


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், இம்மாதம் மூன்று நாள் மூடப்படுகிறது. இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்ட அறிக்கையில், '16ம் தேதி திருவள்ளுவர் தினம், 25ம் தேதி வடலுார் ராமலிங்கர் நினைவு தினம், 26ம் தேதி குடியரசு தினம் ஆகிய மூன்று நாளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், மன மகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற பார்கள் அனைத்தும் செயல்படாது. மீறி செயல்பட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று எச்சரித்துள்ளார்.

இரண்டு சிறுவர்கள் மீட்பு


திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகே உள்ள ஐஸ்கிரீம் கடையில் குழந்தை தொழிலாளர் பணிபுரிவதாக மாவட்ட குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் வந்தது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஷ் அகமது பாஷா தலைமையில், குழந்தைகள் உதவி மைய பணியாளர் வரதராஜ், தொழிலாளர் உதவி ஆய்வாளர் நவனீதன் ஆகியோர், ஐஸ்கிரீம் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். 15 வயது மற்றும் 17 வயது உள்ள இரு சிறுவர்கள் மீட்கப்பட்டு வேலம்பாளையத்தில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

'டிட்டோ ஜாக்' ஆர்ப்பாட்டம்


'பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை மூன்று மாதத்துக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். பயிற்சி ஆசிரியர்களை கருத்தாளராக மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,' என்பது உட்பட கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், அரண்மனைப்புதுார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தெற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் கனகராஜா தலைமை வகித்தார். மரிய பிரகாஷ், ராஜேஷ், சரவணன் உள்ளிட்டோர் பேசினர்.

அரை நாள் மட்டும் முன்பதிவு


பொங்கல் பண்டிகை நாளில், ரயில் டிக்கெட் முன்பதிவு மையம், அரைநாள் (காலை) மட்டும் செயல்படுமென தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. விடுமுறை நாட்களை, ரயில்வே அலுவலர், ஊழியர்களும் கொண்டாடும் வகையில், பண்டிகைகளின் போது, அலுவலகம் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. அவ்வகையில், வரும், 15 ம் தேதி, பொங்கல் பண்டிகை நாளில், காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மட்டும் செயல்படும்; மதியம் விடுமுறை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.22.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், இந்த வாரம் நடந்த ஏலத்தில் கடந்த வாரத்தை காட்டிலும் 34 மூட்டைகள் பருத்தி வரத்து அதிகரித்து, மொத்தம் 1054 மூட்டைகள் பருத்தி வந்தது. ஏலத்தில், ஆர்.சி.எச்., ரகம், குவின்டால், 6,000 - 7,239 ரூபாய்; கொட்டு ரகம், 2,000 - 3,000 ரூபாய் வரை ஏலம் போனது. 22.30 லட்சம் ரூபாய்க்கும் ஏல வர்த்தகம் நடந்தது. கோவை, அன்னுார், அவிநாசி வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பயனடைந்தனர்.

ஆயுர்வேத மருத்துவ முகாம்


திருமுருகன்பூண்டி அன்பு இல்ல வளாகத்தில் சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை சார்பில், ஸ்ரீ பூர்ண சேவா ஆயுர்வேத மருத்துவமனை, எஸ்.ஜி., ஆயுர்வேத மருந்தகம், திருப்பூர் சேவா பாரதி ஆகியவை இணைந்து இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை நடத்தின. நந்தா ஆயுர்வேத கல்லுாரி முதல்வர் கிருத்திகா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். டாக்டர்கள் கிருஷ்ணசாமி, வினீத், வசுந்தரராணி, சிவகுமார் பரிசோதனை செய்தனர். அறக்கட்டளை தலைவர் ராமசாமி, செயலாளர் வேணுகோபால், பொருளாளர் சிவசண்முகம், இணைச் செயலாளர் சுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொகுப்பு கிடைக்காத வேதனை


தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. பயனாளிகள் ரேஷன் கடையில், பயோமெட்ரிக் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு செய்து பரிசுத் தொகுப்பை பெற்று கொள்ளலாம். ஆனால், முதியோர்களின் விரல் ரேகை தேய்ந்து போனதால் பலருக்கு கைரேகை பதிவு செய்ய முடியவில்லை. இதனால், அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். முதியோர்களின் பிரச்னையை தீர்க்கவும், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவருக்கும் கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பஸ் இயக்கம் சீரானது


திருப்பூர் மண்டலத்தில், 8 மற்றும் 9ம் தேதி போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக் நடந்ததால், 450 க்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டது. தற்காலிக டிரைவர்கள் மூலம், 70 சதவீத பஸ்கள் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. கோர்ட் உத்தரவால், ஸ்டிரைக் கைவிடப்பட்டது. நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் வழக்கம் போல் அரசு பஸ்கள், 100 சதவீதம் இயக்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us