/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெயிலின் தாக்கத்தால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விலையும் சரிவதால் விவசாயிகள் கவலை வெயிலின் தாக்கத்தால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விலையும் சரிவதால் விவசாயிகள் கவலை
வெயிலின் தாக்கத்தால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விலையும் சரிவதால் விவசாயிகள் கவலை
வெயிலின் தாக்கத்தால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விலையும் சரிவதால் விவசாயிகள் கவலை
வெயிலின் தாக்கத்தால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு; விலையும் சரிவதால் விவசாயிகள் கவலை
ADDED : மார் 19, 2025 08:39 PM

உடுமலை; வெயிலின் தாக்கம் அதிகரித்து, உற்பத்தி பாதித்துள்ள நிலையில், விலையும் சரிந்து வருவதால், பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், பழனி, நெய்க்காரபட்டி, பொள்ளாச்சி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு வெண் பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பட்டுப்புழுக்களுக்கு மல்பெரி இலைகள் சாகுபடி செய்து, பட்டு புழு வளர்ப்பு மனைகள் அமைத்து, பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
பட்டு முட்டைகளிலிருந்து, ஏழு நாட்கள் இளம்புழு வளர்ப்பு மனைகளில் வளர்க்கப்பட்டு, 21 நாட்கள் விவசாயிகளின் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில், உரிய சீதோஷ்ண நிலை பராமரிக்கப்பட்டு, மல்பெரிய இலைகள் உணவாக வழங்கி வளர்க்கப்பட்டு, இறுதியில் அவை கூடு கட்டுகின்றன.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் சீரான குளிர் சீதோஷ்ண நிலை பராமரிக்க முடியாத நிலை உள்ளது. பட்டுப்புழுக்களுக்கு, 25 டிகிரி செல்சியஸ் முதல், 27 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே வெப்பம் இருக்க வேண்டும்.
தற்போது அபரிமிதமான வெப்ப நிலை காரணமாக, பால் புழுக்கள் இறப்பு, கூடு கட்டும் பருவத்தில், கூட்டிற்குள்ளேயே புழுக்கள் இறந்து விடுகின்றன. மல்பெரி இலைகளும், காய்ந்தும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வெப்ப நிலை உயர்வால், வழக்கமான உற்பத்தியை விட, 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. இந்நிலையில், பட்டுக்கூடுகளுக்கான விலையும் சரிந்து வருகிறது.
இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை கர்நாடக மாநிலம் ராம் நகர் மற்றும் கோவை, உடுமலை, தர்மபுரி, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, தேனி, தென்காசி, ராசிபுரம் மார்க்கெட்களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம், ஒரு கிலோ பட்டுக்கூடு, ரூ. 900 வரை விற்று வந்த நிலையில், தற்போது, ரூ.630 வரை மட்டுமே விற்று வருகிறது. ஒரு சில கூடுகளுக்கு மட்டும், அதிகபட்ச விலையாக, 780 வரை கிடைத்து வருகிறது.
தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நல சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
உற்பத்தி பாதிப்பு, செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட சிக்கல்களால் விவசாயிகள் பாதித்து வரும் நிலையில், விலையும் கிலோவுக்கு, ரூ. 200 வரை குறைந்துள்ளது.
வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாக விவசாயிகள் பாதித்துள்ள நிலையில், தமிழக அரசும், பட்டு வளர்ச்சித்துறையும் கண்டு கொள்ளாததால், பட்டுக்கூடு உற்பத்தி தொழிலிருந்து விவசாயிகள் வெளியேறி வருகின்றனர்.
தரமற்ற முட்டை வினியோகம், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தேவையான உபகரணங்கள், தொழில் நுட்ப உதவிகள் வழங்காதது மற்றும் விலை சரிவு தற்போது, மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, விலை சரிவை தடுக்கவும், பட்டு உற்பத்தி தொழில் வளர்ச்சிக்கும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.