Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நாய்க்கடிக்கு பலியாகும் ஆடுகள்!

நாய்க்கடிக்கு பலியாகும் ஆடுகள்!

நாய்க்கடிக்கு பலியாகும் ஆடுகள்!

நாய்க்கடிக்கு பலியாகும் ஆடுகள்!

ADDED : மே 17, 2025 02:39 AM


Google News
திருப்பூர், : நாய்கள் கடித்து ஆடுகள் பலியாவதை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என, விவசாய அமைப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகர பகுதிகள் மற்றும் காங்கயம், தாராபுரம், மூலனுார், அவிநாசி, பல்லடம் என, மாவட்டம் முழுவதும் தெருநாய்கள் எண்ணிக்கை பெருகியுள்ளது. கடந்த ஓராண்டாக, நாய் கடிக்கு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன.

நாய்கடிக்கு பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, கடந்த மார்ச் 21ல், தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2024 அக்டோபர் மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் வரையிலான ஆறு மாத காலத்தில் பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்துக்கு அதுவும் மிகக்குறைந்த இழப்பீடு ஒதுக்கப்பட்டிருப்பது, விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்; நாய் கடிக்கு பலியாகும் ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என, விவசாய அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாய் கடிக்கு கால்நடைகள் பலியாவது தொடர்வதையடுத்து, அடுத்தடுத்த போராட்டங்கள் நடத்தவும் ஆயத்தமாகிவருகின்றனர்.

இந்நிலையில், நாய்க்கடிக்கு ஆடுகள் பலியாவதை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமைவகித்தார். கால்நடைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விவசாய அமைப்பு பிரதிநிதிகள், தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள்; நாய்கடிக்கு பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து கருத்து தெரிவித்தனர்.

இதில், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி பேசியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், நாய்க் கடிக்கு ஆடு உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது தொடர் கதையாக உள்ளது. இதனால், கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.

பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு பெறுவது தொடர்பான தெளிவான வழிகாட்டி நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிடவேண்டும். பலியாகும் ஆடுகளுக்கு, சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்கவேண்டும்.

கடந்த 2024 ஏப்., 1ம் தேதி முதல் பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். ஆடுகள் பலியாவதை தடுக்க, நாய்களுக்கு கு.க., செய்வது, நிரந்தர தீர்வாகாது. நாய்களுக்கு கு.க., செய்வது தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யவேண்டும். நாய்களின் இருப்பிடத்தை மாற்றுவது, காப்பகங்களில் அடைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

ஆடுகள் பலியாவதை தடுக்க, நாய்களுக்கு கு.க., செய்வது, நிரந்தர தீர்வாகாது. அதற்கான விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நாய்களின் இருப்பிடத்தை மாற்றுவது, காப்பகங்களில் அடைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us