/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/புகையிலைப்பொருள் விற்பனை; எகிறியது அபராத தொகைபுகையிலைப்பொருள் விற்பனை; எகிறியது அபராத தொகை
புகையிலைப்பொருள் விற்பனை; எகிறியது அபராத தொகை
புகையிலைப்பொருள் விற்பனை; எகிறியது அபராத தொகை
புகையிலைப்பொருள் விற்பனை; எகிறியது அபராத தொகை
ADDED : பிப் 10, 2024 12:34 AM

திருப்பூர்:தமிழகத்தில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீதான நடவடிக்கை மற்றும் அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. புகையிலை பொருள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முதல்முறை 5 ஆயிரம், இரண்டாவது முறை 10 ஆயிரம், மூன்றாவது முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடப்பட்டது.
தற்போது, முதல் முறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் 15 நாட்களுக்கு உரிமம், பதிவு ரத்து; இரண்டாவது முறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஒரு மாதம் பதிவு ரத்து, மூன்றாவது முறைக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் 90 நாட்களுக்கு பதிவு, உரிமம் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
தமிழக அரசு உத்தரவுப்படி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையும் கடைகளுக்கு, அபராத தொகை உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. உரிமம், பதிவு ரத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
புதிய அபராதம் விதிப்பு நடைமுறைக்கு வந்த பின், கடந்த ஜன., 5ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, திருப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 25 கடைகள் கண்டறியப்பட்டு, 236 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதல்முறை புகையிலை பொருள் விற்பனை செய்த, 24 கடைகளுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், 6 லட்சம் ரூபாய்; இரண்டாவது முறை விதிமீறிய கடைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் என, மொத்தம் 6.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டுள்ளன.
அபராத தொகை செலுத்தியதற்கான ரசீதுடன், நோட்டரி பப்ளிக் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியபின்னர்தான், கடையை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவர் எனில், சிவில் வழக்கு பதிவு செய்யப்படும்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை குறித்து, 94440 42322 எண்ணில் பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.