Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வட மாநில துாய்மை பணியாளருக்கு சம்பளம் குறைப்பு? தொழிற்சங்கங்களின் உதவியை நாடுவதில் ஆர்வம்

வட மாநில துாய்மை பணியாளருக்கு சம்பளம் குறைப்பு? தொழிற்சங்கங்களின் உதவியை நாடுவதில் ஆர்வம்

வட மாநில துாய்மை பணியாளருக்கு சம்பளம் குறைப்பு? தொழிற்சங்கங்களின் உதவியை நாடுவதில் ஆர்வம்

வட மாநில துாய்மை பணியாளருக்கு சம்பளம் குறைப்பு? தொழிற்சங்கங்களின் உதவியை நாடுவதில் ஆர்வம்

ADDED : மே 24, 2025 11:20 PM


Google News
திருப்பூர்: மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துாய்மைப்பணிகள் தனியாருக்கு 'கான்ட்ராக்ட்' வழங்கப்பட்டுள்ள நிலையில், துாய்மை பணியில் ஈடுபடும் வட மாநில தொழிலாளர்களுக்கு குறைந்தளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனால், வட மாநில தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் உதவியை நாட துவங்கியுள்ளனர்.

தமிழகத்திலுள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் துாய்மைப்பணி, தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. வீடு, வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் இருந்து, துாய்மைப்பணியாளர்கள் வாயிலாக குப்பைகளை சேகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட இடத்தில் அவற்றை கொட்டும் பணியை, தனியார் கான்ட்ராக்ட் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். தனியார் நிறுவனத்தினர் வாயிலாகவே, துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு இடையே சம்பளம் வழங்குவதில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்க நிர்வாகி சுப்ரமணியம் கூறியதாவது:

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் துாய்மைப் பணியாளர்களுக்கென தினசரி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.எப்., - இ.எஸ்.ஐ., பிடித்தம் போக தொழிலாளர்களுக்கு, 500 முதல், 600 ரூபாய் வரை தினமும் சம்பளம் வழங்கப்பட வேண்டும். பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சிகளில் தொழிலாளர்களுக்கு பி.எப்., பிடித்தம் முறையாக கையாளப்படுவதில்லை; பி.எப்., தொகை முறைப்படி பி.எப்., கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.

துாய்மைப் பணியாளர்களுக்கான சம்பளம், தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் தான் வரவு வைக்கப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் தொழிலாளர்களுக்கு ரொக்கமாகவே வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் வருகை நாட்களை குறைத்து காண்பித்து, பி.எப்., கணக்கில் குளறுபடி செய்யும் செயலும் பல இடங்களில் நடக்கிறது.அதோடு, துாய்மைப்பணியில் ஈடுபடும் வட மாநில தொழிலாளர்களுக்கு, சம்பளம் குறைத்து வழங்கப்படுகிறது என்ற புகாரும் வருகிறது. எனவே, வட மாநில தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக இணைந்து, தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளம் பெறுவதில் முனைப்புக் காட்ட துவங்கியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us