ADDED : ஜன 06, 2024 12:35 AM

பல்லடம்;கரைப்புதுார் ஊராட்சி பொன்நகர் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளிக்கான கட்டட கட்டுமான பணி நடந்து வருகிறது. கட்டுமான பணி நடந்துவரும் இடத்தில் இருந்த பாறை ஒன்று வெட்டி கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
பள்ளி கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில், பூமிக்கு அடியில் மிகப்பெரிய பாறை ஒன்று இருந்தது. இதை, யாரோ சிலர் வெட்டி கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். பாறை உடைத்து எடுக்கப்பட்டு சில லோடு கற்கள் கடத்தி செல்லப்பட்டுள்ளன.
பாறையால் பள்ளிக்கு எந்தவித இடையூறும் இல்லாத நிலையில், பாறையை வெட்டி கடத்த முயன்றுள்ளனர். கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாறை வெட்டி கடத்துவது தடுக்கப்பட்டது. இது குறித்து விசாரித்து, கனிம வளத்தை கடத்த முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, கரைப்புதுார் வி.ஏ.ஓ., கவுரி கூறுகையில், ''பள்ளிக்கு முன் இருந்த பாறையின் ஒரு பகுதி இடையூறாக வெளியே நீட்டிக்கொண்டு இருந்தது.
அதைத்தான் வெட்டி அகற்றியுள்ளனர். பாறை எதுவும் கடத்தப்படவில்லை. வேண்டுமானால், ஊராட்சி தலைவரை தொடர்பு கொள்ளுங்கள்,'' என்றார்.