/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருமூர்த்திமலையில் திரண்ட ரேக்ளா வண்டிகள்: பாரம்பரிய முறையில் தை அமாவாசை வழிபாடுதிருமூர்த்திமலையில் திரண்ட ரேக்ளா வண்டிகள்: பாரம்பரிய முறையில் தை அமாவாசை வழிபாடு
திருமூர்த்திமலையில் திரண்ட ரேக்ளா வண்டிகள்: பாரம்பரிய முறையில் தை அமாவாசை வழிபாடு
திருமூர்த்திமலையில் திரண்ட ரேக்ளா வண்டிகள்: பாரம்பரிய முறையில் தை அமாவாசை வழிபாடு
திருமூர்த்திமலையில் திரண்ட ரேக்ளா வண்டிகள்: பாரம்பரிய முறையில் தை அமாவாசை வழிபாடு
ADDED : பிப் 10, 2024 01:21 AM

உடுமலை:திருமூர்த்திமலையில், தை அமாவாசையை முன்னிட்டு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விவசாயிகள் பாரம்பரிய முறையில், ரேக்ளா, குதிரை வண்டிகளில் வந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை அடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள, பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
தை அமாவாசை தினமான நேற்று, மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. அதிகாலை முதலே, நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
மேலும், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் நீராடியும், ஆற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், பிண்டம் கரைத்தும் வழிபட்டனர். இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள், வேளாண் வளம், கால்நடை வளம் சிறக்கவும், ஆடி, தைப்பட்ட சாகுபடி துவங்குவதற்கு முன், இக்கோவிலுக்கு, தை, ஆடி அமாவாசையன்று வந்து வழிபாடு நடத்துவதை, பல நுாறு ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர்.
அதனடிப்படையில், நேற்றுமுன்தினம் முதலே, உடுமலை, பொள்ளாச்சி, குடிமங்கலம் என சுற்றுப்புற கிராமங்களிலிருந்து நுாற்றுக்கணக்கான ரேக்ளா வண்டிகள், குதிரை வண்டிகளில், பாரம்பரிய முறைப்படி திருமூர்த்திமலைக்கு விவசாயிகள் வந்தனர்.
நேற்று காலை, தானியங்களை மும்மூர்த்திகளுக்கு படைத்து, அமணலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.