ADDED : பிப் 09, 2024 11:30 PM

உடுமலை:மலையாண்டிபட்டினத்தில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும், ரேஷன் கடை கட்டமைப்பை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட மலையாண்டிபட்டினத்தின் நுழைவில், இக்கிராமத்துக்கான ரேஷன் கடை தனி கட்டடத்தில் செயல்படுகிறது. குரல்குட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் இந்த கடை செயல்படுகிறது.
அங்கு, 800க்கும் அதிகமான பயனாளிகள் ரேஷன் பொருட்கள் பெறுகின்றனர். ரேஷன் கடை செயல்படும் கட்டடம் சிதிலமடைந்துள்ளது. கட்டடத்தின் மேற்கூரை சிறிது சிறிதாக பெயர்ந்து துகள்களாக விழுந்து கொண்டிருக்கிறது.
பயனாளிகள் பொருட்கள் பெறுவதற்கு, அச்சத்துடன் காத்திருக்க வேண்டியுள்ளது. மேற்கூரை சிதிலமடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருப்பதால், பொதுமக்களுக்கு ஆபத்தான சூழலாகவும் கட்டம் மாறிவிட்டது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன், கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.