/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ரேபிஸ்' வைரஸ் தாக்குதல்; பாதுகாத்துக்கொள்ள 'அட்வைஸ்' 'ரேபிஸ்' வைரஸ் தாக்குதல்; பாதுகாத்துக்கொள்ள 'அட்வைஸ்'
'ரேபிஸ்' வைரஸ் தாக்குதல்; பாதுகாத்துக்கொள்ள 'அட்வைஸ்'
'ரேபிஸ்' வைரஸ் தாக்குதல்; பாதுகாத்துக்கொள்ள 'அட்வைஸ்'
'ரேபிஸ்' வைரஸ் தாக்குதல்; பாதுகாத்துக்கொள்ள 'அட்வைஸ்'
ADDED : மே 31, 2025 05:17 AM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், முன்னதாக நடந்த கருத்தரங்கில், வெறிநாய் கடி குறித்து, பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சுமித்ரா பேசியதாவது:
மற்ற நோய்களையெல்லாம் அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ரேபிஸ் அப்படியல்ல; அறிகுறி தென்படத்துவங்கிவிட்டால், நுாறு சதவீதம் இறப்பை ஏற்படுத்தி விடும். வெறிநாய் மனித உடலில் எந்த இடத்தில் கடிக்கிறது என்பதை பொறுத்து, அறிகுறிகள் தென்படும் நாள் வேறுபடுகிறது. ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். அது, நாளொன்றுக்கு 5 முதல் 15 மில்லி மீட்டர் துாரம் வீதம் பயணித்து, மூளையை சென்று தாக்குகிறது.
வெறிநாய், காலில் கடித்தால், வைரஸ் மூளைக்குச் செல்ல அதிக நேரமாகும்; ஆனால், முகம் போன்ற இடங்களில் கடித்தால் விரைவாக மூளையை சென்றடைந்துவிடும்.
பொதுவாக வெறி நாய் கடித்த ஒரு வாரம் முதல் மூன்று மாதத்துக்குள் ரேபிஸ் அறிகுறிகளை எதிர்பார்க்கலாம். வெறிநாய் கடித்தவர்களிடம் நரம்பு மண்டலம் பாதித்ததற்கான அறிகுறிகள் தென்படும். அதிக உமிழ்நீர் சுரப்பு, காய்ச்சல் ஏற்படும்; கடைசியில் கோமா நிலைக்கு சென்று, உயிரிழப்பு ஏற்படும். அறிகுறிகள் தென்பட்ட பத்து நாட்களுக்குள் இறப்பை ஏற்படுத்திவிடும்.
நாய்களுக்கும் இதுபோலவே தான், அதிக உமிழ்நீர் சுரக்கும்; உணவு, தண்ணீர் அருந்தாது. செயல்பாடுகள் மூர்க்கத்தனமாக இருக்கும். முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மூலம், ரேபிஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். வெறிநாய் கடித்த நாளான பூஜ்ஜிய நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14 வது நாள், 28 வது நாள் ஆகிய ஐந்து தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டால், நுாறு சதவீதம் ரேபிஸிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.