/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பல்லடத்தில் அதிகரிக்கும் கூலிப்படை அட்டகாசம்: அச்சத்தில் பொதுமக்கள்பல்லடத்தில் அதிகரிக்கும் கூலிப்படை அட்டகாசம்: அச்சத்தில் பொதுமக்கள்
பல்லடத்தில் அதிகரிக்கும் கூலிப்படை அட்டகாசம்: அச்சத்தில் பொதுமக்கள்
பல்லடத்தில் அதிகரிக்கும் கூலிப்படை அட்டகாசம்: அச்சத்தில் பொதுமக்கள்
பல்லடத்தில் அதிகரிக்கும் கூலிப்படை அட்டகாசம்: அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : ஜன 28, 2024 12:00 AM
பல்லடம்;பல்லடத்தில், கூலிப் படையினரின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பனியன் நகரமான திருப்பூரை ஒட்டியுள்ள பல்லடம் வட்டாரப் பகுதியில், விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன. இவற்றில், வடமாநிலம் மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில், தொழிலாளர் போர்வையில் கூலிப்படையினர், சமூக விரோதிகளும் உள்ளனர். பணத்துக்காக எதையும் செய்யத் துணியும் இது போன்ற கும்பலால், தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. கஞ்சா, குட்கா விற்பனை, திருட்டு வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் பல்லடம் வட்டாரத்தில் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன், பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்லடத்தைச் சேர்ந்த டிவி நிருபர் நேசபிரபு என்பவர், கூலிப்படையினர் சிலரால், அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில், தொடர்புடைய இருவரை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், கடந்த காலங்களில் பல்வேறு ஆள் கடத்தல், கொலை முயற்சி, வீடு புகுந்து மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்கள் கூலிப்படையினரால் அரங்கேறி உள்ளது. இவ்வாறு, பல்லடம் வட்டார பகுதியில் கூலிப்படையினரின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில், கொங்கு மண்டலம் தான் சண்டை சச்சரவுகள் இல்லாத அமைதியான பகுதியாக கருதப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக நடந்து வரும் செயல்களால், பிற பகுதிகளைப் போல் மாறி வருகிறது. வேலைவாய்ப்பை நம்பி வரும் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. சமூக விரோதிகள் மற்றும் கூலிப்படையினரை கட்டுப்படுத்த மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.