ADDED : பிப் 11, 2024 01:40 AM
திருப்பூர்:முறைகேடாக மின் இணைப்பை மாற்றிய, மின்பாதை ஆய்வாளரை, மின்வாரியம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டது.
திருப்பூர் மின்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு உட்பட்டது, சந்திரா காலனி பகிர்மானம். அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில், மின் இணைப்பு பெயர் பலகை தன்னிச்சையாக மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. எம்.எஸ்., நகர் அம்பேத்கர் காலனி பகுதியில், இறந்தவர் பெயரில் உள்ள மின் இணைப்பை தவறாக பயன்படுத்தி வந்துள்ளனர். புதிய கட்டடத்துக்கு தற்காலிக இணைப்பு பெறாமல், தன்னிச்சையாக பணிகளை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மின்வாரிய அதிகாரிகள் நேற்று கள ஆய்வு நடத்தினர். இதையடுத்து, உரிய கட்டணம் வசூலிக்காமல், மின்வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய, மின்பாதை ஆய்வாளர் ஜெயராஜ் என்பவரை 'சஸ்பெண்ட்' செய்து, செயற்பொறியாளர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.