/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோழிப்பண்ணை கழிவுகள்; விமானங்களுக்கு சிக்கல் கோழிப்பண்ணை கழிவுகள்; விமானங்களுக்கு சிக்கல்
கோழிப்பண்ணை கழிவுகள்; விமானங்களுக்கு சிக்கல்
கோழிப்பண்ணை கழிவுகள்; விமானங்களுக்கு சிக்கல்
கோழிப்பண்ணை கழிவுகள்; விமானங்களுக்கு சிக்கல்
ADDED : செப் 22, 2025 12:39 AM

பல்லடம்; பல்லடம் பகுதியில், திறந்தவெளியில் கொட்டப்படும் கோழிப்பண்ணை கழிவுகளால், சுற்றுச்சூழல் மாசு மட்டுமின்றி, விமானங்கள் இயக்கத்தில் சிக்கல் ஏற்படுகிறது.
பல்லடம் பகுதியில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கறிக்கோழி மற்றும் முட்டை பண்ணைகள் உள்ளன. பண்ணைகளில் இறக்கும் கோழிக்குஞ்சுகள், அழுகிய முட்டைகள் மற்றும் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். சில பண்ணைகளில், விதிமுறை மீறி திறந்த வெளியில் இவை வீசப்படுகின்றன. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
காரணம்பேட்டை, பருவாய், கரடிவாவி, கே.அய்யம்பாளையம், இச்சிப்பட்டி, கே.என்.புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் சூலுார் விமானப்படைத்தளத்தை ஓட்டி அமைந்துள்ளன. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள இப்பகுதிகளில், அடிக்கடி கோழி, இறைச்சி கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. இது, பருந்து, காகம் உள்ளிட்ட பறவைகளை ஈர்க்க செய்கிறது.
கழிவுகளை உணவாக உட்கொள்வதற்காக வரும் பறவைகளால், விமானங்கள் மேல் எழும்புவதிலும், தரை இறங்குவதிலும் ஆபத்து உள்ளது. கிராமப் பகுதிகளில், அடிக்கடி திறந்த வெளியில் கழிவுகள் கொட்டப்படுவதால், இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கூடுதல் 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்துவது அவசியம்.