/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மண் கடத்தலால் உருவான குட்டை; மூடுவதற்கு கோவையில் இருந்து குப்பை: பல்லடம் அருகே மக்கள் அதிர்ச்சி மண் கடத்தலால் உருவான குட்டை; மூடுவதற்கு கோவையில் இருந்து குப்பை: பல்லடம் அருகே மக்கள் அதிர்ச்சி
மண் கடத்தலால் உருவான குட்டை; மூடுவதற்கு கோவையில் இருந்து குப்பை: பல்லடம் அருகே மக்கள் அதிர்ச்சி
மண் கடத்தலால் உருவான குட்டை; மூடுவதற்கு கோவையில் இருந்து குப்பை: பல்லடம் அருகே மக்கள் அதிர்ச்சி
மண் கடத்தலால் உருவான குட்டை; மூடுவதற்கு கோவையில் இருந்து குப்பை: பல்லடம் அருகே மக்கள் அதிர்ச்சி
ADDED : செப் 02, 2025 10:16 PM

பல்லடம்,: பல்லடம் அருகே, செயற்கையாக உருவாக்கப்பட்ட குட்டையை, குப்பை கொண்டு மூட திட்டமிட்ட அதிர்ச்சி சம்பவம், பொதுமக்களால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், பல நுாறு யூனிட் கிராவல் மண் கடத்தப்பட்டதால், ஒரு குட்டையே உருவாகியுள்ளது. மண் கடத்தலை மறைக்கவும், உருவாக்கிய குட்டையை மூடுவதற்காகவும், கோவையிலிருந்து டன் கணக்கில் குப்பைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. பல மாதங்களாக நடந்து வந்த இந்த அத்துமீறல் சம்பவம், நேற்று, பொதுமக்களால் வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து விசாரித்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பட்டா நிலத்தில் நடந்த மண் கடத்தல் மற்றும் பல நுாறு டன் குப்பைகள் விதிமுறை மீறி கொட்டப்பட்டது பொதுமக்களால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அப்பகுதியினர் கூறியதாவது:
தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில், பள்ளம் உருவாக்கி குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. கடந்த, ஏப்., மாதம், கலெக்டரிடம் புகார் அளித்தோம். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்குள் பள்ளம் பெரிதாகி, பட்டா நிலம் குட்டை போல் மாறிவிட்டது. செயற்கையாக உருவாக்கப்பட்ட குட்டைக்குள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவ, கட்டட கழிவுகள், உள்ளாட்சிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்தையும் கொட்டி குட்டையை மூட திட்டமிடப்பட்டது.
இதற்காக, இன்று (நேற்று) காலை, கோவை அருகேயுள்ள நீலாம்பூரில் இருந்து குப்பையுடன் வந்த லாரியை சிறைப்பிடித்தோம். குட்டையை மூட வேண்டி கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளதால், கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் உள்ள இப்பகுதியில், இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். புகார் அளித்து நான்கு மாதமாகியும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காததை கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.