கோவிலில் திருடியவர் கைது
முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த தொங்கும் வடிவிலான பித்தளை விளக்கு திருடு போனது. கோவில் நிர்வாக அதிகாரி (பொ) அன்புதேவி, 34 நல்லுார் போலீசில் புகார் அளித்தார். நல்லுார், சத்யா நகரை சேர்ந்த கிருஷ்ணன், 45 என்பவரிடம் விசாரித்தனர். கிருஷ்ணன், முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் உட்பட பல கோவில்களில் கைவரிசை காட்டியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி மீது தாக்குதல்
இடுவாய், சின்னக்காளிபாளையத்தை சேர்ந்தவர் முத்துக்கருப்பசாமி, 54; விவசாயி. தென்னம்பாளையம் உழவர் சந்தையில் கடை வைத்திருந்த சிவக்குமாருக்கு கடந்த ஜூன் மாதம், 30 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்தார். சிவக்குமாரும் ஒரு மணி நேரத்தில் பணத்தை திரும்ப கொடுப்பதாக கூறி வாங்கினார். இரு மாதமாக பணத்தை கொடுக்கவில்லை. நேற்று முத்துக்கருப்பசாமி தென்னம்பாளையம் உழவர் சந்தையில் வைத்து சிவக்குமாரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். ஆத்திரமடைந்த சிவக்குமார், முத்துக்கருப்பசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு போலீசார், சிவக்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
திருப்பூரில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி வருகையொட்டி பல இடங்களில் கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைத்தனர். அ.தி.மு.க.,வினர் மக்களுக்கும், போக்குரவத்துக்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைத்ததாக மாநகர போலீசார் எம்.ஜி.ஆர். அணி நிர்வாகி வேல்குமார், சாமிநாதன், முருங்கம்பாளையம் பகுதி செயலாளர் கண்ணன் உட்பட, ஐந்து நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
கணவர் வீடியோ; மனைவி தற்கொலை
ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் கீர்த்தி மீனா, 21. நான்கு ஆண்டுகளுக்கு முன் காதலித்து, திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை திருமணம் செய்தார். தம்பதி, இடுவம்பாளையத்தில் தங்கியுள்ளனர். இரண்டு வயதில் குழந்தை உள்ளது. கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதுகுறித்து மனைவி கேட்ட போது, தகராறு ஏற்பட்டது. அப்பெண்ணிடம் தனிமையில் இருந்த வீடியோவை, மனைவியின் மொபைல் போனுக்கு அனுப்பி வைத்தார். இதை பார்த்த மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாழ மறுத்த வாலிபர் கைது
நெருப்பெரிச்சல், சமத்துவபுரத்தை சேர்ந்தவர் நந்தினி, 28; சுனிஷ் என்பவருடன் திருமணமாகி, மகன் உள்ளார். சுனிஷ் சாலை விபத்தில் இறந்தார். பின், தாய் வீட்டுக்கு சென்ற போது, வெங்கமேட்டை சேர்ந்த பிரதீப், 25 என்பவர் நந்தினியை திருமணம் செய்தார். கர்ப்பமாக உள்ளார். நந்தினியை, பிரதீப் ஏற்க மறுத்தார். கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் பிரதீப்பை கைது செய்தனர்.
பள்ளி ஆசிரியை தற்கொலை
திருப்பூர், இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித்ரா, 31; தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், விவேகானந்தன் என்பவருடன் பழகி வந்தார். சில தினங்கள் முன் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனமுடைந்த சுஜித்ரா வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தொழிலாளி பலி
திருப்பூர், தாராபுரம் ரோடு, புதூர் பிரிவை சேர்ந்தவர் கணேசன், 53; தொழிலாளி. கடந்த, 13ம் தேதி சந்திராபுரம் போலீஸ் செக் போஸ்ட் அருகே முன்னால் சென்ற லாரி மீது, டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேற்கு வங்க சிறுவன் பலி
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சருத் ஸ்மித், 12. குடும்பத்துடன் காங்கயம், அரசம்பாளையத்தில் தங்கியுள்ளார். பெற்றோர் தேங்காய் களத்தில் வேலை செய்து வந்தனர். சருத் ஸ்மித் உள்ளிட்ட சிறுவர்கள் நிறுவன கேட் மீது ஏறி விளையாடி கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக கேட் கழன்று, அவர் மீது விழுந்தது. படுகாயமடைந்த சருத் ஸ்மித்தை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இறந்தது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.