கஞ்சா விற்ற 5 பேர் கைது
திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே போலீசார் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த, இருவரிடம் விசாரித்தனர். அதில், பரமசிவம், 24, சங்கையா, 23 என்பது தெரிந்தது. இருவரிடம், 4 கிலோ கஞ்சா பொட்டலம் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. பறிமுதல் செய்து கைது செய்தனர்.
முன்பகையால் வாலிபர் மீது தாக்குதல்
திருப்பூர், வேலம்பாளையம், சோளிபாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார், 26; செல்லப்பிராணிகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் கண்ணன், கார்த்திக், நந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து, மது அருந்தினர். தொடர்ந்து, அருண்குமார் வேலம்பாலையம் அரசு மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அருண்குமாரின் நண்பரான மற்றொரு அருண் என்பவர் அங்கு வந்து அவரை தாக்கி தப்பி சென்றார். வேலம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது
திருப்பூர், ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், 38; கட்டட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி, 24 ஆகியோருக்கிடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் கருப்புசாமி மதுபோதையில் கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், வேலம்பாளையம் போலீசார் கருப்புசாமியை கைது செய்தனர்.
பனியன் தொழிலாளி தற்கொலை
திருப்பூர், அணைப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 35; பனியன் தொழிலாளி. திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளன. மனைவியின் சகோதரர் வீட்டு விஷேசத்துக்கு முருகனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் முருகனிடம் கேட்காமல், மனைவி அந்த விஷேசத்துக்கு சென்றார். இதனால், மனமுடைந்த முருகன் வீட்டில் துாக்குமாட்டி இறந்தார்.