டூவீலர் திருடிய ஆசாமி கைது
ஈரோடு மாவட்டம், பெரிய சேமூரை சேர்ந்தவர் சண்முகம், 29. சில நாள் முன், வெள்ளகோவிலில் கட்டட இன்டீரியர் டெக்கரேஷன் வேலை செய்து கொண்டிருந்தார். வெளியில் நிறுத்தியிருந்த அவரின் டூவீலர் திருட்டு போனது. போலீசார் விசாரித்ததில், கரூர், வாங்கலை சேர்ந்த விஜய், 25 என்பவர் டூவீலரை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்து, டூவீலரை பறிமுதல் செய்தனர்.
துாக்குமாட்டி பெண் தற்கொலை
வெள்ளகோவில், ஒத்தக்கடையை சேர்ந்தவர் வாசுகி, 40. இவருக்கு, 17 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர். கணவர் ரவிசந்திரன் சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். வாசுகி தெரிந்த ஒரு நபரிடம் பணம் வட்டிக்கு கொடுத்தார். தற்போது, மகனின் கல்வி செலவுக்காக கொடுத்த பணத்தை கேட்ட போது, கிடைக்காததால், மனமுடைந்த அவர் வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாகனம் மோதி செக்யூரிட்டி பலி
மதுரை மாவட்டம், பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 47; கடந்த ஒரு ஆண்டாக காங்கயம், சம்பந்தம்பாளையத்தில் உள்ள மில்லில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, கோவை - கரூர் ரோட்டில் ரோட்டை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.