Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/45 நாளுக்குள் 'பேமென்ட்'; தொழில்துறைக்கு கைகொடுக்குமா?

45 நாளுக்குள் 'பேமென்ட்'; தொழில்துறைக்கு கைகொடுக்குமா?

45 நாளுக்குள் 'பேமென்ட்'; தொழில்துறைக்கு கைகொடுக்குமா?

45 நாளுக்குள் 'பேமென்ட்'; தொழில்துறைக்கு கைகொடுக்குமா?

ADDED : பிப் 12, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:''குறு, சிறு நிறுவனங்களிடம் பெறும் சேவை மற்றும் பொருட்களுக்கு, 45 நாளுக்குள் 'பேமென்ட்' செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு வரவேற்புக்குரியது'' என்று, திருப்பூர் 'ஜாப் ஒர்க்' நிறுவன உரிமையாளர்கள் வரவேற்கின்றனர்; அதேசமயம், ஏற்றுமதியாளர்கள் உள்பட உற்பத்தியாளர்கள், 45 நாள் கால அவகாசத்தை 90 நாள் வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுக்கு, 25 லட்சம் முதல், ஐந்து கோடி ரூபாய் வரை வர்த்தக பரிவர்த்தனை செய்தால் குறு நிறுவனம்; ஐந்து கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை பரிவர்த்தனை செய்தால் சிறு நிறுவனம் என்பது, மத்திய அரசின் வரையறை. பெரும்பாலான, குறு, சிறு நிறுவனங்கள், பெரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 'ஜாப் ஒர்க்' அல்லது சேவை பணி செய்கின்றன. இதற்கான கட்டணம்(பேமென்ட்) சீராக கிடைக்காமல் இழுத்தடிக்கப்படுவதால், முறைப்படுத்த வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தினர்.

கடந்தாண்டு பட்ஜெட்டில், 45 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டுமென அரசு அறிவித்தது. கடந்த பிப்., 1ல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில், 45 நாட்களுக்குள் 'பில்' கட்டணத்தை வழங்க வேண்டும்; இல்லாவிடில், லாபமாக கருதி, வருமானவரி செலுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினரின் கருத்துகள்:

நாட்கள் உயரட்டும்------------------------சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:

திருப்பூரில் இயங்கும் நிறுவனங்களில், 90 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள். விற்கப்படும் பொருள் மற்றும் சேவைகளுக்கான கட்டணத்தை, 45 நாட்களுக்குள் பெறுவதை உறுதி செய்வதுதான் அரசின் நோக்கம். இது, விற்பனையாளர் மற்றும் வினியோகஸ்தர்களிடம் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே, ஒப்பந்தம் ஏற்படுத்தி வர்த்தகம் செய்கிறோம். இந்நிலையில், புதிய அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில், இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் கால அவகாசம், 90 நாட்கள். அதன்படி, இடையூறு எதுவும் இல்லாமல் சுமூகமாக வர்த்தகம் நடந்து வருகிறது. எனவே, குறு, சிறு நிறுவனங்களுக்கு இடையேயான கட்டணம் செலுத்தும் அவகாசத்தை, 90 நாட்களாக நிர்ணயிக்க வேண்டுமென, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

நீட்டித்தால் சிறப்பு

--------------------

ஈஸ்வரன், தலைவர்,தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்:

வர்த்தகத்தில், 45 நாட்களுக்குள் பண பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது அருமையான திட்டம். தேவையெனில், 60 நாட்கள் வரை நீட்டிப்பு செய்வதும் சிறப்பாக இருக்கும். குறு, சிறு தொழில்களுக்கான இவ்வறிவிப்பை, முறையாக செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

குறித்த காலத்தில், பணம் கொடுக்காதபட்சத்தில், அபராதம் விதிப்பது போன்ற நடைமுறையை கொண்டுவரலாம். இதுபோல், முறையான பண பரிவர்த்தனை நடக்கும் போது, வங்கி உதவி கிடைப்பதில் தடை இருக்காது; உற்பத்தியாளரும் பயன்பெறுவர்.

அமலானால் பாதுகாப்பு

------------------------

ரத்தினசாமி, தலைவர்,

திருப்பூர் பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க (நிட்மா) தலைவர்:

வரவேற்க வேண்டிய திட்டம்; அனைத்து தொழில் பிரிவினரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கடன் வாங்கியவர்கள், இழுத்தடிப்பதால் கடும் சிரமம் ஏற்படுகிறது. பெரிய நிறுவனங்களும் சில நேரம் இழுத்தடிக்கின்றன. நீண்டகாலமாக எங்கள் கோரிக்கையாக இருந்தது. தொழிலில், வரவு -செலவு சரியாக இருக்க வேண்டும்; அறிவிப்பை முழுமையாக அமல்படுத்தி, குறு, சிறு தொழில்களை பாதுகாக்க வேண்டும்.

தொழிலுக்கு வரப்பிரசாதம்

--------------

மணி, தலைவர், திருப்பூர் தொழில் கூட்டமைப்பு (டிப்):

ஒட்டுமொத்த திருப்பூரும் வரவேற்கிறது; தொழிலை பாதுகாப்பதற்கான வரப்பிரசாதம் போன்றது இத்திட்டம். அதிகாரிகள், உடனடியாக இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தினால், பின்னலாடை தொழில் சந்திக்கும் பிரச்னைகள் தீரும். சீரான வரவு -செலவு நடந்தால் தொழில் நல்ல வளர்ச்சி பெறும்.

சரியான வழிகாட்டுதல்

--------------------

ஸ்ரீகாந்த், தலைவர், 'திருப்பூர் நிட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா):

'பில்' கொடுத்த, 45 நாட்களுக்குள் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு அறிவிப்பில், நிதியாண்டு கணக்கில், கணக்கு முடிக்க வேண்டுமென தெரிவிக்கிறது. வருமான வரி சட்ட அறிவிப்பு குறித்த அறிவிப்பில், மாறுபட்ட கருத்து நிலவுகிறது. முழுமையான அறிக்கை கிடைத்ததும், சரியான வழிகாட்டுதல் கிடைக்கும்.

நல்ல அறிவிப்பு

----------------------------

முத்துரத்தினம், தலைவர், திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்(டீமா):

இது குறு, சிறு நிறுவனங்களை பாதுகாக்கும் ஒரு நல்ல அறிவிப்பு. ஒவ்வொரு தொழிலும், உற்பத்திக்கு முந்தைய பல்வேறு 'ஜாப் ஒர்க்' பிரிவுகள் உள்ளன. சரக்கு வாங்கிய பிறகு உரிய கட்டணம் கிடைக்காமல் பாதிக்கின்றனர். இந்த அறிவிப்பு, உள்நாட்டு வர்த்தகத்துக்கு ஊக்கமளிக்கும். ஒப்பந்தம் செய்தாலும், 45 நாட்களுக்குள் 'பில்' தொகை வழங்கிவிட வேண்டும் என்பதை வரவேற்கிறோம்.

'பார்ட்டி'களுக்கு பொருந்துமா?

-------------------------

ரவிச்சந்திரன், பொதுசெயலாளர், திருப்பூர் உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியாளர்கள் சங்கம்:

45 நாட்களுக்குள் பணம் வர வேண்டும் என்பது சரியான அறிவிப்பு. ஆடைகளை கொள்முதல் செய்தவர் பணம் கொடுக்காதபட்சத்தில், அத்தொகையை பெற்றுத்தரவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், 30 நாட்களுக்குள் பட்டுவாடா நடக்கும். நாங்கள், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு சரியாக கட்டணம் செலுத்தி விடுவோம். எங்களுக்கு வர வேண்டிய வியாபார தொகையை பெற்றுக்கொடுக்கவும் அரசு உதவிட வேண்டும். முழுமையான விவரம் தெரியவந்தால், குழப்பம் தீரும்.

'ஜாப் ஒர்க்' தொழிலுக்கு பாதுகாப்பு

----------------------------

கோபாலகிருஷ்ணன், தலைவர், திருப்பூர் எம்ப்ராய்டரி அசோசியேஷன்:

கடந்த பட்ஜெட்டில், 43பி என்ற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது புதிய மாற்றத்துடன் அமலுக்கு வந்தள்ளது. குறு, சிறு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை, 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், நிதியாண்டு நிறைவில், கொடுக்கப்பட வேண்டிய கட்டணம், லாபமாக கருதி, வருமான வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால், நிட்டிங், எம்ப்ராய்டரிங், பிரின்டிங், டையிங் உள்ளிட்ட 'ஜாப் ஒர்க்' தொழில்கள் பயன்பெறும்.

கால அவகாசம் தேவை

-----------------

கோவிந்தசாமி, தலைவர், திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம்:

உற்பத்தி மற்றும் சேவைக்கான கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கியது சிறப்பானது. எலாஸ்டிக் உற்பத்தியாளர், பெரும்பாலான கொள்முதலை, ரொக்கம் செலுத்தி பெற வேண்டியுள்ளது. ஆனால், உற்பத்தி பொருளை கடனுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. குறு, சிறு எலாஸ்டிக் நிறுவனங்கள், இந்த அறிவிப்பை வரவேற்கின்றன.

விற்பனையாளர்களை நம்பியே, 20 சதவீதத்திற்கு அதிகமான நிறுவனங்கள் உள்ளன; அவர்களுக்கு இது பொருந்தாது. நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தால், 2024 ஏப்., மாதத்துக்கு பின் அமல்படுத்தலாம். ஏதேனும் இடர்பாடு ஏற்படும் என்பதால், கால அவகாசம் கண்டிப்பாக தேவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us