ADDED : ஜன 06, 2024 12:37 AM

திருப்பூர்;பல்லடம் தாலுகா வே.வாவிபாளையத்தில், 'டயாபர்' உற்பத்தி நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள், பொதுமக்கள், விவசாய அமைப்பினர் நுாற்றுக்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் திரண்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, விவசாயிகள், ஆர்ப் பாட்டம் நடத்தினர். 'டயாபர்' நிறுவனம் அமைய எதிர்ப்பு தெரிவித்தும், நில வகைபாடு மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
விவசாயிகள் கூறியதாவது:
வாவிபாளையத்தில், விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில், டயாபர் உற்பத்தி நிறுவனம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நிறுவனம் அமைந்தால், சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடும்; அருகிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்படும்.
நிறுவனம் அமையும் விவசாய நிலத்தை, தவறான ஆவணங்கள் மூலம், தரிசு நிலம் என வகை மாற்றம் செய்ய முயற்சித்து வருகின்றனர். இதற்கு வேளாண்அதிகாரிகள், கலெக்டர் உட்பட வருவாய்த்துறையினர் அனுமதி அளிக்க கூடாது; வகை மாற்றத்தை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.