ADDED : ஜன 25, 2024 06:17 AM
திருப்பூர் : 'பயணிகள் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப நாளை, நாளை மறுதினம் சிறப்பு பஸ் இயக்கப்படும்,' என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று தைப்பூசம் விடுமுறையை முன்னிட்டு பழநி, திருச்செந்துார், சிவன்மலை, அலகுமலைக்கு, 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நாளை (26ம் தேதி) குடியரசு தினம், சனி, ஞாயிறு தொடர் விடுமுறை என்பதால், கூட்ட நெரிசலுக்கு ஏற்ப சிறப்பு பஸ் இயக்க திருப்பூர் மண்டல அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
'பொங்கல் தொடர் விடுமுறைக்கு, ஆறு நாள் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. விடுமுறை வெளியூர் சென்ற பலர் கடந்த வாரம் தான் திருப்பூர் வந்து சேர்ந்துள்ளனர்; வந்தவர்கள், மீண்டும் உடனடியாக, பயணிக்க வாய்ப்பு குறைவு. இருப்பினும், வியாழன் இரவு, வெள்ளி மற்றும், சனிக்கிழமை மத்திய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக, பத்து பஸ்கள் நிறுத்தி வைக்கப்படும். பயணிகள் கூட்டம் அதிகரித்தால், கூடுதல் பஸ்கள் டிப்போவில் இருந்து அனுப்பி வைக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.