ADDED : செப் 04, 2025 11:58 PM

திருப்பூர்; ஓணம் பண்டிகை மற்றும் 3 நாள் தொடர் விடுமுறை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து கேரளா மற்றும் பிற ஊர்களுக்கு செல்லும் மக்கள் திரண்டதால், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஓணம் பண்டிகை, இன்று கொண்டாடப்படுகிறது. வெளியூர்களில் வசிக்கும் மலையாள மக்கள், பண்டிகைக்காக சொந்த ஊரான கேரளா செல்வது வழக்கம். திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும், ஏராளமான மலையாள மக்கள் வசிக்கின்றனர்.அவர்கள் ஓணம் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பாலக்காடு சென்று, அங்கிருந்து கேரளா செல்வதற்காக, பயணிகள் குவிந்தனர்.
அதே போன்று, 3 நாள் தொடர் விடுமுறையை ஒட்டி, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவை, உடுமலை, பழனி உள்ளிட்ட இடங்களுக்கும், அங்கிருந்த பிற இடங்களுக்கு செல்லும் பயணிகளும் திரண்டனர். ஆனால், பயணிகள் கூட்டத்திற்கேற்ப, பஸ்கள் இல்லாததால், நீண்ட நேரம் காத்திருந்தும், அவ்வப்போது வந்த பஸ்களில் தொங்கியபடியும் பயணித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே, இதுபோன்ற விழா நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் போதியளவில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
அதே போன்று, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கும், இரவு நேரங்களில் பஸ்களின் எண்ணிக்கை மிக்குறைவு என்பதால், விழா நாட்களில் அங்கும் கூட்டம் திரண்டு காணப்பட்டது. மொத்தத்தில், விழா கால பயணம் என்பது, பொதுமக்களை பாடாய்படுத்துகிறது என்பதே யதார்த்தம்.