/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓணம் பண்டிகை ஆர்டர் வரத்து மந்தம்; பின்னலாடை வர்த்தகர்கள் கவலை ஓணம் பண்டிகை ஆர்டர் வரத்து மந்தம்; பின்னலாடை வர்த்தகர்கள் கவலை
ஓணம் பண்டிகை ஆர்டர் வரத்து மந்தம்; பின்னலாடை வர்த்தகர்கள் கவலை
ஓணம் பண்டிகை ஆர்டர் வரத்து மந்தம்; பின்னலாடை வர்த்தகர்கள் கவலை
ஓணம் பண்டிகை ஆர்டர் வரத்து மந்தம்; பின்னலாடை வர்த்தகர்கள் கவலை
ADDED : செப் 04, 2025 12:10 AM

திருப்பூர்; கேரளாவில் இருந்து ஓணம் பண்டிகைகால ஆர்டர் வரத்து குறைந்து விட்டதாக, திருப்பூர் பின்னலாடை மொத்த வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் இருந்து, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட, பல்வேறு நாடுகளுக்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்து வருகிறது. திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னல் ஆடைகள், டில்லி வரையுள்ள, உள்நாட்டு சந்தைகளிலும் விற்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, நவராத்திரி, ஆங்கில புத்தாண்டு, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக்கால ஆர்டர்கள் கிடைக்கும். அதன்மீது உற்பத்தி செய்து, புதுரக பனியன் ஆடைகள் அனுப்பி வைக்கப்படும்; நாடு முழுவதும் உள்ள மக்கள், அவற்றை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், மலையாள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை ஆர்டரும், திருப்பூருக்கு நீண்ட நாட்களாக கை கொடுத்து வந்தது. தீபாவளிக்கு முன்னோட்டமாக, ஓணம் பண்டிகை ஆர்டர் கைகொடுக்கும். கொரோனா தொற்றுக்கு பின் ஓணம் பண்டிகை ஆர்டர் வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது.
இது குறித்து, திருப்பூர் காதர்பேட்டை பின்னலாடை வர்த்தகர்கள் கூறியதாவது:
கேரளாவில், கொ ரோனா தொற்றுக்கு பின், திருப்பூரில் பணியாற்றி வந்தவர்கள் இணைந்து, பின்னலாடை உற்பத்தி யூனிட்களை துவங்கிவிட்டனர். அதன்படி, திருப்பூரில் இருந்து, மெஷின்களை வாங்கி சென்றுள்ளனர்.
மாதம்தோறும் திருப்பூரில் இருந்து, கலர் பனியன் துணிகளை மட்டும் வாங்கிச்சென்று, ஆடைகளாக உற்பத்தி செய்து, கேரளாவில் உள்ள, பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்கின்றனர்.
இதனால், கேரள ஆர்டர் திருப்பூர் வருவது குறைந்து வருகிறது. திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடை மற்றும் உள்ளாடைகளின் தரத்துடன் போட்டியிட முடியாது என்பதால், திருப்பூருக்கான வாய்ப்பு முற்றிலும் கைமாறவில்லை. இருப்பினும், ஓணம் பண்டிகை ஆர்டர்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்தாண்டு, வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால், ஓணம் கொண்டாடவில்லை. பரவலாக மழை பெய்து கொண்டே இருப்பதால், சில்லரை விற்பனை குறைந்துவிட்டதாக, கேரள சிறு வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால், திருப்பூர் வந்து சரக்கு எடுத்துசெல்வது குறைந்துவிட்டது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.