/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓட்டுச்சாவடி எண்ணிக்கை உயர்கிறது; அரசியல் கட்சியினருடன் ஆலோசனை ஓட்டுச்சாவடி எண்ணிக்கை உயர்கிறது; அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
ஓட்டுச்சாவடி எண்ணிக்கை உயர்கிறது; அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
ஓட்டுச்சாவடி எண்ணிக்கை உயர்கிறது; அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
ஓட்டுச்சாவடி எண்ணிக்கை உயர்கிறது; அரசியல் கட்சியினருடன் ஆலோசனை
ADDED : செப் 09, 2025 10:49 PM

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 1,200க்கு மேல் வாக்காளரை கொண்ட ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து முடிவு செய்வதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று நடைபெறுகிறது.
தேர்தலில், வாக்காளர்கள் சிரமமின்றி, எளிதாக ஓட்டளிக்கும் வகையில், 1,500 வாக்காளருக்கு ஒரு ஓட்டுச்சாவடி என்கிற நடைமுறை உள்ளது. தற்போது, 1,200 வாக்காளருக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, புதிய ஓட்டுச்சாவடி உருவாக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், வரும், 2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும், ஓட்டுச்சாவடிகளை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 2,536 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவை, 1,074 வளாகங்களில் அமைந்துள்ளன. 11 லட்சத்து 82 ஆயிரத்து 905 ஆண், 12 லட்சத்து 32 ஆயிரத்து 351 பெண், 352 திருநங்கை என, மொத்தம், 24 லட்சத்து 15 ஆயிரத்து 608 வாக்காளர் உள்ளனர்.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 1,200க்கு மேல் வாக்காளர் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது, புதிய ஓட்டுச்சாவடி உருவாக்குவது குறித்து முடிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இது குறித்து, ஆலோசிக்க, திருப்பூர் கலெக்டர் அலுவலக அரங்கில், மாலை, 5:00 மணிக்கு, கலெக்டர் மனீஷ் நாரணவரே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மாநகராட்சி கமிஷனர், எட்டு சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்கின்றனர்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 1200 க்கு மேல் வாக்களர் உள்ள ஓட்டுச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரே மையத்தில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர் எண்ணிக்கை சீராக இருக்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, 1,200க்கு மேல் வாக்காளரை கொண்ட ஓட்டுச்சாவடிகளிலிருந்து, கூடுதல் வாக்காளர்களை பிரித்து, ஒரே வளாகத்தில் செயல்படும், குறைவான வாக்காளரை கொண்ட ஓட்டுச்சாவடியுடன் சேர்க்கப்படுகிறது.
அந்தவகையில், எட்டு தொகுதிகளில் புதிதாக 280 ஓட்டுச்சாவடிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு, புதிய ஓட்டுச்சாவடி எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டு, தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.