Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/செப்பவல்லார்க்கு இல்லை துன்பமே!

செப்பவல்லார்க்கு இல்லை துன்பமே!

செப்பவல்லார்க்கு இல்லை துன்பமே!

செப்பவல்லார்க்கு இல்லை துன்பமே!

ADDED : ஜன 31, 2024 12:30 AM


Google News
- நமது நிருபர் -

பரம்பொருள் பல தலங்களில் அருள்பாலித்தாலும், குறிப்பிட்ட தலங்களை பக்தர்களை தன்வயப்படுத்தும் அமைப்பில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மும்மை சிறப்புடையதும், காசிக்கு நிகரானதும், கொங்கு ஏழு தலங்களில் முதன்மையானதும் அவிநாசி திருத்தலம்.

அவிநாசி கோவிலின் சிறப்புகள் குறித்து ஆரூர சுப்ரமண்ய சிவாச்சார்யார் கூறியதாவது:

நம்பி ஆரூர் பெருமான் பாடியவண்ணம், மாண்ட உயிரை மீட்ட பெருமை, திருப்புக்கொளியூர் எனும் அவிநாசியையே சாரும். உலகில், 84 லட்சம் கோடி ஜீவராசிகள் பிறப்பதாக வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அப்பிறப்பில் ஒன்றுதான் மானிட பிறவி.

மானிட பிறவியை அருளும் பரம்பொருள், நம் முற்பிறப்பில் ஏற்பட்ட நல்வினை, தீவினையை ஒட்டி, இன்ப துன்பங்களை அனுபவிக்க வைக்கிறார். இப்படியான அனுபவத்தின் ஓர் பக்குவ நிலையே ஆன்மிகம், இறைத்தொண்டு, இன்னும் பல நற்சேவை செய்தல். இதில் முதன்மையானது இறைவனை சிந்தித்து பக்தி செய்தல்.

பக்தியின் உயர்நிலை


பக்தி செய்து இறைவனை தொழுது, துாமலர் துாவித்துதித்து நின்று, அழுது வணங்குபவர்களுக்கு, மீண்டும் பிறவா நிலை வழங்கி, ஈசன் தன் திருவடியில் நிலைக்க செய்கிறார் என்பதே சைவ சமய பக்தியின் உயர்நிலை. அவ்வாறாக, நம்பி ஆரூர் பெருமான் அருளி பாடிய அவிநாசி தலத்தில், 'தொண்டன் ஆரூர் கருதிய சீர் ஏழு பாடல்கள் செப்பவல்லார்க்கு இல்லை துன்பமே' என்று குறிப்பிட்டுள்ளார்.

மனித பிறப்பில், தெரிந்தும், தெரியாமல் பல ஆன்மாக்கள் பாவ செயல்களை துரதிஷ்டவசமாக செய்து விடுகிறது. அப்பாவங்கள் மீண்டும் பிறப்பு எடுக்கும் வகையில் பெருக்கிவிடுகிறது. அதனையே, மாணிக்கவாசக பெருந்தகை, 'அல்லற் பிறவி அறுப்பானே ஓ' என்று அருளுகிறார்.

பிறப்பிணியை நீக்கவும், பாவ செயல்களை நீக்கி, புண்ணிய பலனை அடைய, நான்கு யுகங்களாக, தேவாதி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என பலவாறு வழிபட்டு பேற பெற்றுள்ளனர்.

பார்வதி தேவியாம் ஸ்ரீபெருங்கருணை நாயகியே, பல ஆண்டு பூஜித்து பேறு பெற்றார் என, தலபுராணம் குறிப்பிடுகிறது. அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை நீக்கி, அருள்பாலிக்கும் இறை சக்தியாக வீற்றிருக்கிறார் நம் அவிநாசியப்பர்.

பாவங்களைபோக்கும் தலம்


காசி ேஷத்திரத்தில் ஏற்படும் பாவங்கள் திருப்புக்கொளியூர் எனும் அவிநாசி ேஷத்திரத்தில், எல்லாம் வல்ல ஸ்ரீஅவிநாசியப்பரை தொழுது வணங்கினால் முற்றிலும் நீங்கும். அவிநாசி தலத்தில் ஏற்படும் பாவம், எத்தலத்துக்கு சென்றாலும் நீங்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காசியில் உள்ள மூல ஸ்தானத்தில் ஸ்ரீவிஸ்வநாத பெருமானின் மூல பிம்பத்தில் இருந்து ஓர் வேர் உற்பத்தியாகி வாரணாசி கொழுந்தாக, அவிநாசியம்பதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீஅவிநாசிநாதருக்கு, பக்த பெருமக்கள் பலரின் பங்களிப்புகளுடன், திருப்பணிகள் சிறப்புற செய்விக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பெரும்சிறப்பு பெற்ற ஸ்ரீஅவிநாசியப்பருக்கு, வரும், 2ம் தேதி மகா கும்பாபி ேஷக விழா நடத்த திருவருள், குருவருள் கூட்டி வைத்துள்ளது.

இப்பெருவிழாவில், கலந்துகொண்டு, எம்பெருமானை தொழுது வணங்கினால், பிறவிப்பிணி நீங்கி, இகபர சகல சவுபாக்யங்களையும் பெற்று பேரானந்த பெருவாழ்வு பெற்றுய்ய அழைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us