Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திட்டமிடப்பட்ட பணிகள் எதுவும் நடக்கல தூக்கம் கலையுமா?அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அதிருப்தி

திட்டமிடப்பட்ட பணிகள் எதுவும் நடக்கல தூக்கம் கலையுமா?அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அதிருப்தி

திட்டமிடப்பட்ட பணிகள் எதுவும் நடக்கல தூக்கம் கலையுமா?அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அதிருப்தி

திட்டமிடப்பட்ட பணிகள் எதுவும் நடக்கல தூக்கம் கலையுமா?அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அதிருப்தி

ADDED : ஜன 28, 2024 08:56 PM


Google News
உடுமலை:உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்த போக்குவரத்து கமிட்டி கூட்டம் நடத்தி ஒரு ஆண்டாகியும், தீர்வு காணப்படவில்லை. இதனால், நகரில் நெரிசலும், விபத்துக்களும் நிரந்தரமாக உள்ளது.

உடுமலை நகராட்சி பகுதிகளில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, நகராட்சி, வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, போக்குவரத்துக்கழகம், போலீசார் என பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கடந்தாண்டு நடத்தப்பட்டது.

இதில், நகரப்பகுதியிலுள்ள ஒவ்வொரு ரோடுகளிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, தற்காலிக கடைகளுக்கு தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், வெங்கடகிருஷ்ணா ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு என, எந்த ரோட்டிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

தற்காலிக தள்ளுவண்டி கடைகளுக்கு என இடம் ஒதுக்கப்படவில்லை. வழக்கம் போல், அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக உள்ளது.

பைபாஸ் ரோட்டில், இரவு, 7:00 மணி முதல் 10:00 மணி வரை, ஆம்னி பஸ்கள், ரோட்டை ஆக்கிரமித்து வரிசையாக நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்து ஏற்படுகிறது.

வாகனங்கள் நிறுத்த தடை விதிப்பது, ஆம்னி பஸ்கள் நிறுத்த மாற்று ஏற்பாடுகள் செய்வது என்ற முடிவும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால், மாலை நேரங்களில் பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகளில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

தளி ரோட்டில், சிக்னல் முதல் குட்டை விநாயகர் கோவில் வரை, ரோடு குறுகலாகவும், ஆக்கிரமிப்புகள் நிறைந்தும் உள்ளது.

இந்த ரோட்டில், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, ரோடு அமைக்கவும், இரு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்தும் வகையில், ஒரு புறம் 'பார்க்கிங்' திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அத்திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.

லாரிபேட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றி, லாரிகள், பொக்லைன், கிரேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், தாராபுரம் ரோடு, பழைய குப்பை கிடங்கு பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

ஆனால், கனரக வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட், பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதிகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிகரித்துள்ளது.

தளி ரோடு ரயில்வே மேம்பாலத்தில், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பாலம் முடிந்ததும், உடனடியாக வாகனங்கள் திரும்புவதால் விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

பாலத்தின் இரு புறமும், 50 அடி நீளத்திற்கு மையத்தடுப்புகள் அமைக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை.

அதே போல், பழநி ரோட்டில், கொழுமம் ரோடு பிரிவு முதல், வெஞ்சமடை கால்வாய் பாலம் வரை, பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்புகள் உள்ளதால், அதிவேகமாக வரும் வாகனங்களால், மாணவர்கள், பொதுமக்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.

இப்பகுதியில் மையத்தடுப்புகள் அமைத்து, பள்ளி, கல்லுாரிகள் முன், வேகத்தடை அமைக்க வலியுறுத்தப்பட்டது. இதுவும் நடைமுறைப்படுத்தவில்லை.

உடுமலை - தளி ரோடு, நுாலகம் மற்றும் யூனியன் ஆபீஸ் பகுதிளில், பஸ் ஸ்டாப்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனால், நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண எந்த பணிகளும் நடைமுறைக்கு வராமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே, உடுமலை நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us