/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அனைத்து உயிர்களும் இணைந்ததே இயற்கை! அனைத்து உயிர்களும் இணைந்ததே இயற்கை!
அனைத்து உயிர்களும் இணைந்ததே இயற்கை!
அனைத்து உயிர்களும் இணைந்ததே இயற்கை!
அனைத்து உயிர்களும் இணைந்ததே இயற்கை!
ADDED : ஜூன் 01, 2025 07:10 AM

பல்லடம் 'வனம்' அமைப்பின் சார்பில், மழை வேண்டி, 500வது சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி பாலு பேசியதாவது:
நான் தானியங்களை உற்பத்தி செய்கிறேன். இவற்றை, உலகிலுள்ள பல்லாயிரக்கணக்காண உயிர்கள் உண்டு வாழ்கின்றன. இதனால், அனைத்து உயிர்களின் உடலும் உள்ளமும் மேம்பட வேண்டும். எனவே, இதை எங்கும் கிடைக்காத ஒரு பொருளாக கருதி, அன்பையும் கருணையும் இணைத்து உற்பத்தி செய்து கொடுப்பேன் என, விவசாயிகள் சபதமேற்கொண்டு விவசாயம் செய்ய வேண்டும். விவசாயத்தில் வருமானமே வருவதில்லை என்று கூறுவது தவறானது. விவசாயிகள் நோக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
எங்களால் தான், எத்தனையோ உயிர்கள் இந்த உலகில் வாழ்கின்றன என்று எண்ணினால், உயிரைக் கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விவசாயத்துக்குள் நுழையாது. இதேபோல், டாக்டரான ஒருவர், தனது மருத்துவமனைக்கு அதிக நோயாளிகள் வந்து, தனக்கு அதிக வருமானம் கிடைத்து, தான் வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்து விட வேண்டும் என்று நினைத்தால், அது உண்மையான வைத்தியம் ஆகாது.
தன்னை நோக்கி வரும் நோயாளிகள் விரைவில் குணமடைய வேண்டும். இது போன்ற ஒரு வியாதி யாருக்கும் இனி வரக்கூடாது என்ற பிரார்த்தனையுடன் தான் டாக்டர்கள் வேலை பார்க்க வேண்டும். இவ்வாறு எந்த ஒரு தொழிலிலும் உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டால் அது உயர்ந்ததாக அமையும். இன்று மனிதர்கள், மன கஷ்டம் பண கஷ்டம், நோய் உள்ளிட்ட கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இயற்கை மட்டுமே இவற்றுக்கு மூல காரணமாக இருக்கும். நாம் ஒருவர் மட்டுமே என்று நினைத்து வாழ்ந்தால், துன்பங்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும். மனிதர்கள் உட்பட அனைத்து உயிர்களும் இணைந்தது தான் இயற்கை. இயற்கையோடு இணைந்து பல்லுயிர்களுடன் வாழ்ந்தால் உயர்ந்த நிலையை அடையலாம். இயற்கை தனக்கு என ஒரு சட்டத்தை வைத்துள்ளது. இதனை யாரும் மீற முடியாது. நாம் ஒவ்வொருவரும் இயற்கை சட்டத்தை மதித்து, எதிர்கால சந்ததிக்கு நல்லதொரு உலகை விட்டுச் செல்ல வேண்டியது அனைவரின் கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.
வனம் அமைப்பின் தலைவர் சின்னசாமி, செயலாளர் சுந்தரராஜ், திருப்பூர் வருமான வரித்துறை இணை ஆணையர் இளங்கிள்ளி, ஆய்வாளர் ரங்கநாதன், பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்கள் லோகநாதன், வரதராஜன், செல்வராஜ், ஷோபிகா, குணசீலன், சத்யா உட்பட பலர் பங்கேற்றனர். வனம் அமைப்பின் இயக்குனர் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.