/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேசிய வேலை உறுதி திட்டம்: சம்பளம் வழங்க தடுமாற்றம்தேசிய வேலை உறுதி திட்டம்: சம்பளம் வழங்க தடுமாற்றம்
தேசிய வேலை உறுதி திட்டம்: சம்பளம் வழங்க தடுமாற்றம்
தேசிய வேலை உறுதி திட்டம்: சம்பளம் வழங்க தடுமாற்றம்
தேசிய வேலை உறுதி திட்டம்: சம்பளம் வழங்க தடுமாற்றம்
ADDED : ஜன 31, 2024 02:14 AM
திருப்பூர்:காந்தி நினைவு நாளில், அவரது பெயரில் செயல்படும், தேசிய நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு, நிலுவை சம்பளம் வழங்கக்கோரி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த, 2005 முதல் நுாறு நாள் வேலை உறுதியளிப்புத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மண் வேலை, நீர்நிலைகளை துார்வாருவது, நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தினசரி சம்பளமாக, 294 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு ஊராட்சியிலும், நுாற்றுக்கணக்கானோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சரியான முறையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.
அந்த வகையில், கடந்த, 3 மாதமாக நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு, சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், மகாத்மா காந்தியின் நினைவு நாளான நேற்று, நுாறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி, கம்யூ., தொழிற்சங்கத்தினர், மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொழிற்சங்கத்தினர் கூறுகையில், 'நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை நம்பி பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். சில மாதங்களாகவே சரியான தேதியில் சம்பளம் விடுவிக்கப்படாததால், தொழிலாளர்கள் பொருளாதார நிலையில் பாதிக்கப்படுகின்றனர். தடையின்றி சம்பளம் வழங்க வேண்டும்,' என்றனர்.