/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறு பாசன கணக்கெடுப்பு துவக்கம்; களப்பணியில் 361 பேர் சிறு பாசன கணக்கெடுப்பு துவக்கம்; களப்பணியில் 361 பேர்
சிறு பாசன கணக்கெடுப்பு துவக்கம்; களப்பணியில் 361 பேர்
சிறு பாசன கணக்கெடுப்பு துவக்கம்; களப்பணியில் 361 பேர்
சிறு பாசன கணக்கெடுப்பு துவக்கம்; களப்பணியில் 361 பேர்
ADDED : ஜூன் 12, 2025 10:05 PM
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், சிறு பாசன கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.
மத்திய ஜல்சக்தி அமைச்சகம், நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, சிறு பாசன கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அவ்வகையில், ஏழாவது கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. தமிழகத்தில், புள்ளியியல் துறை வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
ஒன்பது தாலுகா, 13 வட்டாரங்களை உள்ளடக்கிய திருப்பூர் மாவட்டத்தில், சிறு பாசன கணக்கெடுப்பு, துவங்கியுள்ளது. கிராமப்பகுதிகளில் வி.ஏ.ஓ.,க்கள், நகர பகுதிகளில், அந்தந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் புள்ளியியல் துறையினர், கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, மாவட்ட புள்ளியியல் அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், வி.ஏ.ஓ.,க்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள், புள்ளியியல் துறையினர் மொத்தம் 361 பேர், கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள், விவசாயிகளை அணுகி, புதிதாக அமைக்கப்பட்ட கிணறு, ஆழ்துளை கிணறு, ஏற்கனவே உள்ள நீர் நிலைகளின் தற்போதைய நிலை உள்பட, 34 வகையான விபரங்களை சேகரித்து, ஆன்லைனில் பதிவு செய்வர்.
ஏற்கனவே பயன்பாட்டிலிருந்த கிணறு, ஆழ்துளை கிணறுகள், தற்போது பயன்பாட்டில் இல்லையெனில், அந்தபகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதா; மோட்டார், மின் இணைப்பு வசதி இல்லையா; கழிவுநீர் கலந்துள்ளதா, வேறு காரணங்கள் இருப்பின் அதுகுறித்த முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.
களப்பணியாளர்கள் பதிவு செய்யும் சிறுபாசனம் தொடர்பான விபரங்கள், உடனுக்குடன் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கு பகிரப்படும்.
கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறோம். விவசாயிகள், சிறுபாசனம் தொடர்பான முழுமையான தகவல்களை களப்பணியாளர்களிடம் தெரிவித்து, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.