Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கனிமவளம் சுரண்டல்; 'குரல்' எழுப்ப தடை?

கனிமவளம் சுரண்டல்; 'குரல்' எழுப்ப தடை?

கனிமவளம் சுரண்டல்; 'குரல்' எழுப்ப தடை?

கனிமவளம் சுரண்டல்; 'குரல்' எழுப்ப தடை?

ADDED : ஜூன் 30, 2025 12:33 AM


Google News
திருப்பூர்;

கனிம வளத்துறை சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக பிரத்யேக குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்ற முந்தைய கலெக்டரின் அறிவிப்பு, தற்போது கானல் நீராகியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த மே 30ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், அப்போதைய கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசும்போது, 'விவசாயிகள் கோரிக்கைகளை தொடர்ந்து, கனிமவளத்துறை சார்ந்த பிரச்னைகள் தொடர்பான மனுக்களை பெற்று, தீர்வு காணப்படும்.

கனிமவளத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் வகையில், கனிமவளத்துறைக்கான பிரத்யேக குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்' என உறுதி அளித்தார்.

அவர் பணியிட மாறுதலாகி சென்றநிலையில், கனிமவள குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்கிற உறுதிமொழியும், கானல் நீராகிவிட்டது. புதிய கலெக்டர் மனீஸ் நாரணவரே தலைமையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கடந்த 27ம் தேதி நடைபெற்றது.

இதில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கனிமவளம் சார்ந்த பிரச்னைகளை பேசியபோது, 'விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், வேளாண் சார்ந்த பிரச்னைகளை மட்டும் பேசுங்கள். வேறு பிரச்னைகளை தனியாக சந்தித்து தெரிவியுங்கள்' என கலெக்டர் அறிவுறுத்தினார்.

கனிம வளங்கள் கொள்ளை


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:

மாவட்டத்தில் பல குவாரிகள், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக கனிம வளங்களை வெட்டி எடுக்கின்றன. இதற்காக, சட்ட விரோதமாக கூடுதல் வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

குவாரி வெடி விபத்தில் உயிர்பலி சம்பவங்களும் நடக்கின்றன. முறைகேடாக கனிமவளங்களை வெட்டி எடுத்து, அருகாமை மாநிலங்களுக்கு கடத்துகின்றனர். விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

பசுந்தீவனங்கள் கிடைக்காமல், கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மனுவாக மட்டுமே அளிக்க மட்டுமே முடியும். விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், குவாரி சார்ந்த பிரச்னைகளை முழுமையாக பேச முடிவதில்லை. மேலும், குவாரிகள் தரப்பினரும் கலந்துகொண்டு பேச முடியும்.

கனிவள சுரண்டலுக்கு எதிராக, புதிய கலெக்டர் சாட்டையை சுழற்ற வேண்டும். மாதந்தோறும் கனிமவள சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும். கனிமவளம், வருவாய்த்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், பொதுப்பணித்துறை, போலீஸ் மாவட்ட, தாலுகா, கோட்ட அளவில் முதல்நிலை அதிகாரிகளை கட்டாயம் பங்கேற்கச் செய்யவேண்டும்.

வரையறை தாண்டி வெட்டியெடுப்பு

திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், தாராபுரம், மடத்துக்குளம், காங்கயம், ஊத்துக்குளி பகுதிகளில், நுாற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு குவாரிக்கும் எவ்வளவு கனிமவளம் வெட்டி எடுக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில குவாரிகள், அனுமதித்ததைவிட கூடுதல் இடங்களில், அளவுக்கு அதிகமாக கனிமவளங்களை வெட்டி எடுத்து, கடத்துகின்றன. கல்குவாரிகளின் விதிமீறல்கள் குறித்தும், அத்துமீறும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் மனு அளித்துவருகின்றனர். ஆனால் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us