ADDED : பிப் 10, 2024 11:25 PM

பல்லடத்தில், வாகன போக்குவரத்து நிறைந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அன்றாடம் எண்ணற்ற விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மனிதர்கள் விபத்துக்குள்ளானால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓடோடி வந்து உதவி செய்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால்,தெரு நாய், பூனை உள்ளிட்டவை விபத்துக்குள்ளானால், பெரிய அளவுக்கு யாரும் கண்டு கொள்வதில்லை.
'நமக்கென்ன' என்ற எண்ணத்துடன் சென்று விடுகின்றனர். இதில், ஒரு சிலர் மட்டுமே மனிதாபிமானத்துடன் செயல்படுகின்றனர். இவ்வாறு, விபத்துக்குள்ளான தெருநாய் ஒன்றுக்கு, வாகன ஓட்டி ஒருவர் உதவியது நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு மருத்துவமனை முன் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற தெரு நாய் ஒன்றின் மீது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.
இதில், அதன் பின்னங்கால் பகுதியில் பலத்த அடிபட்டது. இதனால், நாய் நகரவும் முடியாமல் வலியால் துடித்தபடி ரோட்டிலேயே கிடந்தது. அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஒதுங்கி செல்ல, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் அடிபட்ட நாயின் மீது கருணை காட்டினார்.
ரோட்டோரத்தில் கொண்டு செல்ல முயன்ற போது, விபத்துக்குள்ளான பதட்டத்தில் அச்சமடைந்த நாய் அவரை கடிக்க முயன்றது.
இருப்பினும், நாயை மீட்க முயற்சித்த அந்த வாகன ஓட்டி, மெதுவாக அதை வருடி கொடுத்து, பின் லாவகமாக துாக்கி வந்து ரோட்டோரத்தில் விட்டார்.
பொதுமக்கள் சிலரும் நாய்க்கு பிஸ்கட் கொடுத்தனர். மனிதர்கள் அடிபட்டாலே, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வோர் மத்தியில், தெரு நாய் மீது கருணை காட்டிய வாகன ஓட்டியின் செயலை பலரும் மனமார பாராட்டினர்.