Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஊட்டச்சத்து குறைபாடு; நகரப்பகுதியில் அதிகம்! சுகாதாரப் பிரச்னை காரணம்?

ஊட்டச்சத்து குறைபாடு; நகரப்பகுதியில் அதிகம்! சுகாதாரப் பிரச்னை காரணம்?

ஊட்டச்சத்து குறைபாடு; நகரப்பகுதியில் அதிகம்! சுகாதாரப் பிரச்னை காரணம்?

ஊட்டச்சத்து குறைபாடு; நகரப்பகுதியில் அதிகம்! சுகாதாரப் பிரச்னை காரணம்?

ADDED : ஜன 27, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்:'திருப்பூர் மாநகராட்சி எல்லையில் வசிக்கும், 2 முதல், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கிராமப்புற குழந்தைகளை விட, ஊட்டச்சத்து குறைபாடால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், போஷான் அபியான் திட்டத்தில் கீழ், 2 முதல், 6 வயது வரையிலான குழந்தைகளின் வளர்ச்சி, ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பணி மேற்கெள்ளப்படுகிறது.

அதன்படி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் குழந்தைகளிடம், ஊட்டச்சத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டத்தில், 14 மண்டலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 2 முதல், 6 வயது வரை, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 456 குழந்தைகள் உள்ளனர். இவர்களில், ஒரு லட்சத்து 40 குழந்தைகள் உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடின்றி உள்ளனர்.

கடந்தாண்டு, நவ., நிலவரப்படி, திருப்பூர் மாவட்டத்தில், 10 ஆயிரத்து 416 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 2,485 பேர், அதாவது, 16.40 சதவீதம் பேர், திருப்பூர் நகரப்பகுதியில் உள்ளனர் என்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. கிராமப்புறங்களை ஒப்பிடுகையில், நகரப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை, கவலையளிப்பதாக உள்ளது.

காரணம் என்ன?

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் குறித்து ஆராயும் போது, இந்த வயது குழந்தைகள் பராமரிக்கப்படும், அங்கன்வாடி மையங்களின் சுற்றுப்புறம் துாய்மையாக இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

மையத்தை ஒட்டி குப்பைகள் கொட்டப்பட்டிருப்பது; மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்பது போன்றவை குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடை ஏற்படுத்துகின்றன. இதனால், ஏற்படும் உடல்நலக்குறைவால், குழந்தைகள், அங்கன்வாடிக்கு வராமல், அதிக நாட்கள் விடுமுறையில் இருந்துள்ளனர் என்ற விவரமும் தெரிய வந்திருக்கிறது.

இது ஒரு காரணமாக இருந்தாலும், பெரும்பாலான பெற்றோர் பனியன் நிறுவனம், துாய்மைப் பணி செய்வோராக உள்ளனர். அவர்கள் காலையில் வேலைக்கு சென்று, இரவு வீடு திரும்புகின்றனர். குழந்தைகளுக்கு சரியான நேரத்தில், ஊட்டச்சத்து உணவுகளை அவர்கள் வழங்குவதில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சுத்தம், சுகாதாரம் வேண்டும்...

தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் கூறுகையில்,'நகர எல்லைக்குள் கண்மூடித்தனமாக குப்பைகள் கொட்டப்படுகின்றன. உதாரணமாக, அம்பேத்கர் நகர், சுப்பையா காலனி உள்ளிட்ட இடங்களில், அங்கன்வாடி மையங்களின் பின், அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. வெள்ளியங்காடு அங்கன்வாடி மையத்தின் பின், பெரிய கழிவுநீர் கால்வாய் செல்கிறது. சுகாதாரமற்ற சூழலால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுகிறது,' என்றனர்.எனவே, மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரமற்ற சூழலில் உள்ள அங்கன்வாடி மையங்களை அடையாளம் கண்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us