ADDED : பிப் 24, 2024 12:08 AM

பல்லடம்;போலீஸ் பற்றாக்குறை காரணமாக, பல்லடம் பஸ் ஸ்டாண்டில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையம், பெரும்பாலும் பூட்டியே கிடப்பதால், குற்ற சம்பவங்களுக்கு வழிவகுப்பதாக உள்ளது.
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் இருந்து, தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, தொழிலாளர்கள் பொதுமக்கள், திருப்பூர், கோவை நகரங்களுக்கு வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எந்நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். பஸ் ஸ்டாண்டுக்கு வரும் பயணிகள், பொது மக்களின் நலன் கருதி, சமீபத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. திறப்பு விழா செய்து ஆறு மாதமாகியும், போலீஸ் பற்றாக்குறையால் பெரும்பாலான நேரம் புறக்காவல் நிலையம் பூட்டியே கிடக்கிறது.
பொதுமக்கள் கூறிய தாவது: பஸ் ஸ்டாண்டில் தான் அதிகப்படியான குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. பஸ் ஸ்டாண்ட் எதிரே டாஸ்மாக் கடை உள்ளதால், 'குடி'மகன்கள் மது போதையில் மட்டையாகிக் கிடப்பதும், தகராறுகளில் ஈடுபடுவதும் அதிக அளவில் நடக்கின்றன.
பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியரை வட்டமிடும் 'புல்லிங்கோஸ்', காலை மற்றும் மாலை நேரங்களில், பைக் பந்தயம் நடத்துவது போல் பஸ் ஸ்டாண்டுக்குள் அதிவேகத்தில் உலா வருகின்றனர்.
இவர்களால் விபத்து அபாயம் ஏற்படுவதுடன், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. போலீசார் நிரந்தரமாக புறக்காவல் நிலையத்தில் பணியாற்றினால், குற்ற சம்பவங்கள் தடுக்கப்படுவதுடன், பயணிகள் பொதுமக்கள் பாதுகாப்புடன் செல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.