Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்துக்கு உள்ளூர் விடுமுறை! ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேண்டுகோள்

அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்துக்கு உள்ளூர் விடுமுறை! ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேண்டுகோள்

அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்துக்கு உள்ளூர் விடுமுறை! ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேண்டுகோள்

அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்துக்கு உள்ளூர் விடுமுறை! ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வேண்டுகோள்

ADDED : ஜன 13, 2024 01:59 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், பிப்.,2ல் கும்பாபிேஷகம் நடத்தப்படுகிறது. திரளான பக்தர்கள், பொதுமக்கள் கூடும், பிரம்மாண்ட விழாவாக இது அமைய இருப்பதால், விழா ஏற்பாடுகளில், ஹிந்து சமய அறநிலையத்துறை கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதற்காக, சப் - கலெக்டர் சவுமியா ஆனந்த் தலைமையில், நேற்று மாலை, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. சம்மந்தப்பட்ட, 8 துறைகளுக்கும் பணி ஒதுக்கப்பட்டது.

பாதுகாப்பில் கவனம்


போலீசாருக்கு வழங்கப்பட்ட பணியில், வரும், 29 முதல், அடுத்த மாதம், 2ம் தேதி இரவு வரை, யாக சாலைக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அன்றைய நாட்களில், கோவிலுக்கு வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி, பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கும்பாபிேஷக தினத்தன்று, கோவில் நிர்வாகத்தால் வழங்கப்படும் 'பேட்ஜ்', அடையாள அட்டை உள்ளவர்களை மட்டும் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கும் நபர்களை மட்டுமே விமானங்கள், ராஜகோபுர சாரங்களில் ஏற அனுமதிக்க வேண்டும்.

சுகாதாரத்துக்குமுன்னுரிமை


அவிநாசி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி நிர்வாகத்தினர், கோவில் வளாகம், யாக சாலை சுற்றுப்புறங்களை துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கோவில் வளாகம் அருகில் அமைந்துள்ள பொதுக்கழிப்பிடத்தை சுத்தம் செய்து, தேவையான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். தேவையான இடங்களில் தற்காலிக கழிவறை அமைக்க வேண்டும்.

ஸ்திரத்தன்மை அவசியம்


பக்தர்கள் பாதுகாப்பு கருதி, கோவில் விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களில் கட்டப்படும் மூங்கில் சாரங்கள், படிகள் உள்ளிட்ட கட்டுமானங்களின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து, சான்று வழங்க வேண்டும்.

நல்லாற்றில் கட்டப்பட்டுள்ள பாலங்களின் வழியாகவே பக்தர்கள் அதிகளவில் வருவர் என்பதால், சுகாதாரம் கருதி, நல்லாற்றில் வளர்ந்துள்ள செடி, குப்பைகளை அகற்ற வேண்டும்.

அன்னதானம்


மருத்துவ துறையினரை பொறுத்தவரை, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், நோய் தொற்று பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக்குழுவினரை ஏற்பாடு செய்ய வேண்டும். அன்றைய தினம், அவிநாசியில் உள்ள மண்படங்களில் தனி நபர்களால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

கோவில் அருகில் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டியினரால், அன்னதானம் வழங்கப்பட உள்ளது. சுகாதாரமான முறையில், தரமாக உணவு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அசம்பாவிதம் கூடாது


மின்வாரியத்தினர், விழா நாட்களில், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். கோவில் வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை அவ்வப்போது ஆய்வு செய்வதற்கு போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

தீயணைப்புத்துறை சார்பில் மீட்புப்பணி குழுவினருடன், யாகசாலை அருகில் ஒரு தீயணைப்பு வாகனம், கும்பாபிேஷக தினத்தன்று, கூடுதலாக தெப்பக்குளம் பகுதியில் ஒரு வாகனம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு, பணிகள் பகிர்ந்தளிக்கப்பட் டுள்ளது.

''ஒட்டு மொத்த பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை, கோவில் செயல் அலுவலர் மேற்கொள்ள வேண்டும்'' என, சப்- கலெக்டர் சவுமியா ஆனந்த் கூறினார். ''கும்பாபிேஷக தினத்தன்று, உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்'' என, கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி கோரிக்கை வைத்தார்.

ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்குமார், அவிநாசி தாசில்தார் மோகனன், டி.எஸ்.பி., சிவகுமார், மண்டல துணை பி.டி.ஓ., தவமணி, தீயணைப்பு நிலைய அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ராதாகிருஷ்ணன் உட்பட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us